பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள்; ஆக.1-ல் கணக்கெடுப்பை தொடங்கும் தமிழக அரசு!
கட்டாயத்தின் பேரிலும், வறுமையின் காரணமாகவும் வேலைக்கு அனுப்பப்படும் மாணவர்கள் மற்றும் கொத்தடிமை குழந்தைகளை மீட்டு அவர்களை பள்ளியில் சேர்க்க உரிய துறையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் இடைநின்ற, பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்த விவரங்களை ஆகஸ்ட் 1 முதல் தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுக்க உள்ளது. 6 முதல் 18 வயதுடைய மாணவர்கள், இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
அனைத்து குழந்தைகளும் ஆரம்பப் பள்ளியில் சேர்வதை
அங்கன்வாடியில் இருந்த அனைத்து குழந்தைகளும் ஆரம்பப் பள்ளியில் சேர்வதை, அங்கன்வாடி மைய பணியாளர்களுடன் இணைந்து உறுதிப்படுத்த வேண்டும்.
உள்ளடக்கிய கல்விக்கான செயல்பாட்டின் மூலம் மாற்றுத் திறனுடைய குழந்தைகளின் உடல் கூறுகளின் நிலையை கணக்கில் கொண்டு உதவ வேண்டும். இதன் வழியாக மாற்றுத்திறனுடைய குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்ய முடியும்.
காடுகள் நிறைந்த மலைப் பகுதிகள், பாதுகாப்பற்ற சாலை வசதி, வன விலங்குகளின் அச்சுறுத்தல் இவைகளால் பாதிக்கப்படும் மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் பள்ளியில் சேர்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள துணை நிற்க வேண்டும்.
குழந்தைத் திருமணம் நடைபெறும் வாழிடப் பகுதிகளை கண்காணித்து ஆலோசனை வழங்கி, பிற சமூக கலாச்சார நம்பிக்கைகளால் பாதிப்பிற்கு உள்ளாகும் மாணவர்களையும் பள்ளியில் சேர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கொத்தடிமை குழந்தைகள் மீட்பு
கட்டாயத்தின் பேரிலும், வறுமையின் காரணமாகவும் வேலைக்கு அனுப்பப்படும் மாணவர்கள் மற்றும் கொத்தடிமை குழந்தைகளை மீட்டு அவர்களை பள்ளியில் சேர்க்க உரிய துறையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.
கடந்த ஆண்டின் கணக்கெடுப்பின் படி, இடம்பெயர்தலின் காரணமாக இடைநின்ற மாணவர்களே அதிகம் உள்ளனர். எனவே, இடம்பெயர்தலால் பாதிப்பிற்கு உள்ளாகும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க சரியான திட்டமிடல் வேண்டும்.
திருவிழா மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் வேலை செய்ய மாணவர்கள் இடம்பெயராதவாறு பள்ளியில் தக்க வைக்க ஆலோசனைகள் வழங்குதல் வேண்டும்.
யாரெல்லாம் இடைநின்ற குழந்தை?
தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற (Dropout) குழந்தையாகக் கருத வேண்டும்.
பள்ளியே செல்லாத குழந்தைகள் இதுவரை பள்ளியில் சேராத பள்ளி வயது குழந்தைகளை மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்படக் கணக்கெடுப்பின் மூலம் கண்டறிய வேண்டும். அக்குழந்தைகளை வயதுகேற்ற வகுப்பில் அருகமை பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
8ஆண்டுகள் தொடக்கக் கல்வியை முழுமையாக முடிக்காத மாணவர்கள்.
ஒரு மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகள் இடைநிற்றலுக்கு வாய்ப்பு அதிகம் உள்ள குழந்தைகளாக (Potential Dropouts) கருதப்படுவர்.
ஒரு மாணவர் 30 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வரவில்லை எனில்அம்மாணவரின் விவரங்கள் பொதுத்தரவுத் தளத்தில் பதிவேற்றப்படும்.
பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு:
பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, 6 – 18 வயதுடையவர்களை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இக்கல்வியாண்டிற்கான கணக்கெடுப்பு களப்பணி 01.08.2025 முதல் நடைபெற வேண்டும் என்று பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.






















