உங்களுடன் ஸ்டாலின்: மயிலாடுதுறை மக்களுக்கு அரசின் சேவைகள் வீடு தேடி! விண்ணப்பங்கள், முகாம்கள் & முக்கிய அறிவிப்பு!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மயிலாடுதுறையில் ஜூலை 15 -ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து.

தமிழக மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, அரசு சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டபேரவை கூட்டத்தொடர் அறிவித்த, "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டம் தமிழகம் முழுவதும் துவங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திட்டத்தின் நோக்கம்
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், கடைகோடி மக்களும் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவதாகும். இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, உரிய அரசு சேவைகளை எளிதில் பெற முடியும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் "உங்களுடன் ஸ்டாலின்"
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 15 -ம் தேதி முதல் அக்டோபர் 15 -ம் தேதி வரை மொத்தம் 130 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் நகர்ப்புறப் பகுதிகளில் 32 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 98 முகாம்களும் அடங்கும்.
முதற்கட்ட முகாம்கள்
முதற்கட்டமாக, ஜூலை 15 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 -ம் தேதி வரை 48 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில் 13 முகாம்கள் நகர்ப்புறப் பகுதிகளிலும், 35 முகாம்கள் ஊரகப் பகுதிகளிலும் நடைபெறும்.
அரசு சேவைகள் மற்றும் மருத்துவ முகாம்கள்
இந்த முகாம்களில், நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன், பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில் மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக செல்ல உள்ள தன்னார்வலர்கள்
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாகத் தெரிவிக்கும் வகையில், தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று தகவலை சேர்க்கும் பணி ஜூலை 7, 2025 தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணி அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும்.
தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம், அங்கு வழங்கப்படும் திட்டங்கள், சேவைகள், அவற்றைப் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து விளக்குவார்கள். மேலும், தகவல் கையேடு மற்றும் விண்ணப்பப் படிவங்களையும் வழங்குவார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின், முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
இதுகுறித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.






















