Electoral Bonds: எஸ்பிஐ-க்கு மீண்டும் குட்டு - தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு
Electoral Bonds: தேர்தல் பத்திரங்களுக்கான பிரத்யேக எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட, எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட, எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவு:
இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திற்குமான பிரத்யேக எண், சீரியல் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும். இதனை வரும் 21ம் தேதிக்குள் செய்து முடித்து அன்று மாலை 5 மணிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதில், எஸ்பிஐ தனது கைவசம் மற்றும் காவலில் உள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்தியதாகவும், எந்த விவரமும் மறைக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். எஸ்பிஐ-யிடமிருந்து தரவுகள் கிடைத்தவுடன் தேர்தல் ஆணையம் அந்த தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படும் என எஸ்பிஐ வங்கியும் வாக்குறுதி அளித்துள்ளது.
Electoral Bonds: Supreme Court directs SBI to disclose all details of Electoral Bonds in its procession, including the unique alphanumeric number and the serial number, if any, of the bonds redeemed.
— ANI (@ANI) March 18, 2024
Supreme Court directs the SBI Chairman to file an affidavit by 5 pm, Thursday… pic.twitter.com/hPu9ICCRRm
மீண்டும் கொட்டு வாங்கிய எஸ்பிஐ வங்கி:
தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தாமலேயே அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும், தேர்தல் பத்திரங்கள் நடைமுறையை பாஜக தலைமையிலான அரசு 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதையெதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு எதிராக இருப்பதாக கூறி அதனை ரத்து செய்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடவும், எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால், தரவுகளை சேகரித்து வெளியிட ஜுன் 30ம் தேதி வரை எஸ்பிஐ வங்கி அவகாசம் கோரியது. அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் 24 மணி நேரத்திற்குள் தரவுகளை வெளியிட உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை எஸ்பிஐ வங்கி வெளியிட்டது. ஆனால், அதில் பத்திரங்களுக்கான பிரத்யேக எண்கள் மற்றும் சீரியல் எண்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் இடம்பெறாமல் இருந்தது. இதனால், யார் யார் எந்தெந்த கட்சிகளுக்கு நிதி அளித்தனர் என்பது தொடர்பான விவரங்களை தெளிவாக அறியமுடியவில்லை. இந்நிலையில் தான், சீரியல் எண் உள்ளிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும், வரும் வியாழக்கிழமைக்குள் எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.