Pride Month : பால்புதுமையினரை கொண்டாடும் படங்கள்.. தினம் ஒரு படம் (Call me by your name)
ஜூன் மாதம் முழுவதும் பிரைட் மாதமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு பால்புதுமையினரை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படங்களைப் பார்க்கலாம்
![Pride Month : பால்புதுமையினரை கொண்டாடும் படங்கள்.. தினம் ஒரு படம் (Call me by your name) movies that celebrated the stories of lgbtq community call me by your name Pride month Pride Month : பால்புதுமையினரை கொண்டாடும் படங்கள்.. தினம் ஒரு படம் (Call me by your name)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/01/6e94fba9e33db1ce6c30cc68695b62461685609535427571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வருடா வருடம் ஜூன் 1 முதல் 30 வரை pride month கொண்டாடப்படுகிறது. Queer என்று அடையாளப்படுத்தப்படும் பால்புதுமையினர் சமூகத்தில் தங்களது அடையாளத்தை பெருமையுடன் வெளிப்படுத்திக் கொள்ளவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வருடந்தோறும் ஜூன் மாதத்தைக் கொண்டாடி வருகிறார்கள். ப்ரைட் மாதத்தை முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் பால்புதுமையினரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான படங்களை அறிமுக செய்யும் வகையில் இந்த முயற்சி. முதல் நாளான இன்று call me by your name படத்தில் இருந்து தொடங்கலாம்.
Call me by your name
எலியோ என்கிற 17 வயது இளைஞன் தனது விடுமுறையைக் கழிப்பதற்காக தனது குடும்பத்துடன் இத்தாலியில் இருக்கும் தங்களது பண்ணை வீட்டிற்கு வந்திருக்கிறார். அவனது தந்தை ஒரு தொல்பொருள் ஆய்வாளராக இருக்கிறார். தான் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிக்கு உதவியாக தனது மாணவன் 24 வயதுடைய ஆலிவரை தனது வீட்டிற்கு அழைக்கிறார். எலியோ ஆலிவரிடம் ஈர்க்கப்பட்டு அவர்கள் இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ஒரு ஆணிடம் எலியோ ஈர்க்கப்படுவது, எலியோவிற்கு இதுவே முதல் முறை. ஒருவகையில் அவனுக்கு முதல் காதலும் இதுதான்.
முதல் முறையாக காதல் என்கிற அடையாளம் தெரியாத ஒரு உணர்வு நம்மை வந்துசேரும்போது நாம் அதை வெறும் நிகழ்வுகளாக மட்டுமே உணர்வதில்லை. அந்த நேரத்தில் நாம் இருக்கும் சூழல் ,எங்கோ தூரத்தில் தற்செயலாக ஓடிக்கொண்டிருந்த பாடல், நம்மைச் சுற்றி நிறங்கள், காற்று, என நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றிலும் அந்த உணர்வு கலந்திருக்கிறது.
சிலர் தங்களது முதல் காதலை நினைவுகூறும் போது அந்த நேரத்தில் காற்றில் இருந்த வாசனையை நினைவுபடுத்தி பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் எலியோ உணரும் காதலை நாம் அவனது சூழலை வைத்து உணர்ந்துகொள்ளும் கதைசொல்லல், முதல் காதலை அனுபவிக்கும் மனதின் தனிமை, வன்முறை என அத்தனையையும் சேர்ந்து, அவனைச் சுற்றி இருக்கும் பழத்தோட்டங்கள் வழியாக உணரக்கூடிய ஒரு அனுபவம் இந்தப் படத்தில் கிடைக்கும்
காதல் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத இதயங்கள் காதலிக்காமலே இருப்பது நல்லது என்று எங்கோ யாரோ சொன்னார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் முதல் காதல் தோல்வியில் மனம் வெதும்பி கண்கள் கலங்கி அனுபவித்த குளிர்ந்த இரவுகளின் தனிமையில் துவண்டு கிடந்து அதிலிருந்து மீண்டு வந்து காயம் ஆறிய புதுத்தழும்பை, இளம் வெயிலில் காட்டும் சுகத்தை அனுபவிப்பதற்காகவே இந்த உலகில் அனைவரும் காதல் வயப்பட்டு மனம் உடைந்து போகவேண்டும் என தன்னலமாக வேண்டிக்கொள்கிறேன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)