டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
அமைச்சர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டம் ஆகிய திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியை விரைந்து அளிக்க வேண்டும் என நேரில் சென்று மத்திய அரசை வலியுறுத்த உள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று மாலை டெல்லி கிளம்பி உள்ளார். அங்கு அவர் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சென்று சந்திக்க உள்ளார்.
அப்போது அமைச்சர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டம் ஆகிய திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியை விரைந்து அளிக்க வேண்டும் என நேரில் சென்று மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எவ்வளவு நிதி?
சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு, 2152 கோடி ரூபாய் நிதியை நிலுவையில் வைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ் மழலைக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட அளவிலான நிதியை மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது. இதன்படி 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும்.
இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழக நிதியாக ரூ.3,586 கோடி, மத்திய அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கான 60 சதவீதத் தொகை ரூ.2,152 கோடி 4 தவணைகளில் ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்த ஆண்டு ஜூலை மாதமே முடிய உள்ள நிலையில், நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அதேபோல, ஆர்டிஇ எனப்படும் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் 600 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் வழங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியை வழங்க வேண்டும் என்று கோரியே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில், மத்தியக் கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க கோரி மனு அளித்துள்ளார்.






















