Aadhav Arjuna : ‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா புது உருட்டு..!
’விஜய் திமுகவிற்கு ஸ்கெட்ச் போடவில்லை. ஆதவ் அர்ஜூனாவை வைத்து விஜய்க்குதான் திமுக ஸ்கெட்ச் போட்டிருக்கிறது என்று கண்சிமிட்டுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்’ தட் நீ வரல, உன்ன வர வச்சான் மொமண்ட்..!

எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசி சிக்கிய ஆதவ் அர்ஜூனா, தற்போது அதிமுக தொண்டர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டனர் என்று பேசி மீண்டும் சர்ச்சையில் மாட்டியிருக்கிறார். சர்ச்சையாக பேசுவதும் சர்ச்சையில் மாட்டிக்கொள்வதும் ஆதவ் அர்ஜூனாவிற்கு ஒன்றும் புதிது அல்ல, வடிவேலு பாணியில் சொல்வதானால் ‘திரும்ப, திரும்ப பேசுற நீ’ என்பதுபோல், திரும்ப திரும்ப பேசி, அதுவும் சர்ச்சையாகவே பேசி தன்னை ‘லைம் லைட்டில்’ வைத்துக்கொள்வதுதான் ஆதவ் அர்ஜூனா பாணி.
இது தெரிந்துதான் திருமாவளவன் ஒரே போடாக போட்டு ஆதவ் அர்ஜூனாவை கட்சியை விட்டு நீக்கினார். அதன்பிறகு விஜயை முதல்வர் ஆக்குவேன் என்று சொல்லிக்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் சென்று இணைந்தார் ஆதவ். ஆனால், இதுவரை எந்த உருப்படியான விஷயத்தையும் செய்யவில்லை என்பது விஜய்க்கு தெரியுமோ இல்லையோ அவர்களது தொண்டர்களுக்கு மிக நிச்சயமாக தெரியும். சமுக வலைதளங்களில் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக அவர்கள் செய்யும் சண்டமாருதமே அதற்கு சான்று.
லாட்டரி மார்ட்டின் அடையாளத்தை மாற்ற குட்டிக்கரணம்
லாட்டரி மார்ட்டினின் மருமகன் என்ற தன்னுடைய அடையாளத்தை மாற்றுவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நம்பர் 2ஆக முயற்சிகளை மேற்கொண்டார் ஆதவ். ஆனால், அது தெரிந்த நிர்வாகிகள், வந்தவுடனே ஹூரோ ஆக நினைத்தால் எப்படி பாஸ் ? என்று அவரது முகத்திரையை கிழித்தெறிந்து திருமாவை வைத்தே ஆதவை வெளியில் தூக்கிப் போட வைத்தனர். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் சேர்ந்தது முதல் வில்லத்தனங்களின் மொத்த உருவமாய் மாறி, விஜயை முட்டுச் சந்திற்கு அழைத்து செல்லும் வேலைகளை மட்டுமே தொடர்ச்சியாக ஆதவ் அர்ஜூனா பார்ப்பதாக, அவரது கட்சி நிர்வாகிகளே கவலையில் தோய்ந்து உள்ளனர்.
கம்பு சுத்திய ஆதவ் – உடைத்துப் போட்ட திமுக
திமுகவை 2021ல் வெற்றி பெற வைத்ததே நான் தான் என்று கம்பு சுத்திய ஆதவ் அர்ஜூனாவிற்கு தெரிந்தது எல்லாம் பூத் கமிட்டி போடுவது, உறுப்பினர் சேர்க்கையை ஆன்லைனில் நடத்துவது, மிஞ்சிப் போனால் மாநாடு அதற்கு பின்னர் பாத யாத்திரை இவ்வளவுதான். ‘இவ்வளவு நேரம் இதையாவா ஒட்டிகிட்டு இருந்த?’ கணக்காய் இன்னும் விஜய்க்கு உருப்படியான எந்த திட்டத்தையும் வகுத்துக்கொடுக்காமல் பிம்பலிக்கா பிலாப்பி காட்டிக்கொண்டிருக்கும் ஆதவின் செயல்பாடுகள் விஜயின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியையே ஆவேசப் பட வைத்திருக்கிறது.
ஆதவ் அர்ஜூனா உருட்டு
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்தாலும் இன்னும் எந்த பெரிய கட்சிகளும் விஜய் தலைமையை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்காக வந்துச் சேரவில்லை. இன்னும் தேர்தலுக்கு 8 மாதம் இருக்கிறது கடைசி நேரத்தில் வருவார்கள் என்று ஆதவ் அர்ஜூனா விஜய் தரப்பிடம் உருட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆளுங்கட்சியான திமுக இப்போதே உங்களுடன் ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு என்று அனல் பறக்க தேர்தல் பணிகளை தெறிக்கவிட்டிருக்கிறது, பிரதான எதிர்க்கட்சியான எடப்பாடி பழனிசாமியோ 234 தொகுதிகளுக்கும் தன்னுடைய சுற்றுப் பயணத்தை இப்போதே தொடங்கி மிரட்டிக்கொண்டிருக்கிறார்.
அதிபுத்திசாலித்தனத்தில் சிக்கும் விஜய் ?
ஆனால், மதுரையில் மாநாடு அறிவிப்பு என்பதை காட்டிலும் சொல்லிக் கொள்ளும்விதமாக எந்த முன்னெடுப்பும் விஜய் தரப்பில் நடைபெறாததற்கு ஆதவ் அர்ஜூனாவின் அதிபுத்திசாலித்தன ஆலோசனைகளே காரணம் என புலம்பி தள்ளுகிறார்கள் நிர்வாகிகள். ஆதவ் அர்ஜூனா ஆலோசனைகளை ஓரங்கட்டிவிட்டு, அரசியல் கள எதார்த்தத்தை புரிந்துக்கொண்டு அடுத்தடுத்த முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக் கழகம் செய்ய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. அப்படி எதையுமே செய்யாமல் ஆடிக்கு ஒரு மாநாடு அப்பறம் அடுத்து என்னென்னு இப்போதைக்கு தெரியாது என்று விட்டத்தை பார்த்து மல்லாந்து படுத்துக்கொண்டிருந்தால், லெட்டர் பேடு கட்சிகள் கூட விஜயை நாடி வராது என்பதுதான் எதார்த்தம்.
நெருப்பு விடும் ஆதவ் டீம் – கருகுவது கட்சியினரா ?
தனக்கு சமூக வலைதளங்களில் நெருப்பு விடுவதற்கு மட்டும் ஆட்களை வைத்துக்கொண்டிருந்தால் வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் புஷ்வானம் ஆவதற்கு ஆதவ்தான் முக்கிய காரணமாக இருப்பார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஆளத் துடிக்கும் கட்சி என அத்தனை பேரும் அனல் பறக்க கள பணிகளை தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த முக்கோண போட்டியை உடைக்க முயற்சிக்காமல், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது மாதிரி பேசிக்கொண்டிருந்தால் ஆதவ் அர்ஜூனா பேசிக்கொண்டிருந்தால், விஜயின் அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்து என்பதுதான் அரசியல் நோக்கர்களின் பார்வை.





















