Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Luxury Car Sales India UK Trade Deal: இந்தியா - இங்கிலாந்து இடையேயான புதிய வணிக ஒப்பந்தத்தால், உள்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களின் விலை அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Luxury Car Sales India UK Trade Deal: விரைவில் குறையும் என நம்புவதால் சொகுசு கார்களின் விற்பனை குறைந்து இருப்பது டீலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்:
தடையற்ற வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது உள்நாட்டு ஆட்டோமொபைல் சந்தையில் சொகுசு கார் பிரிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், புதிய ஒப்பந்தமானது டாப் என்ட் கார்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரியானது திருத்தி அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சொகுசு கார்களின் விற்பனை மந்த நிலைக்கு சென்றுள்ளது. விலை குறையும் என்ற நம்பிக்கையில், ஏற்கனவே முன்பதிவு செய்த கார்களையும் ரத்து செய்ய தொடங்கியுள்ளனர்.
ரத்தாகும் சொகுசு கார்களின் முன்பதிவுகள்:
இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தமானது கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முற்றிலும் கட்டமைக்கப்பட்டு அந்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் காரின் மீது விதிக்கப்படும், 75 முதல் 125 சதவிகிதம் வரையிலான இறக்குமதி வரியானது 10 சதவிகிதம் ஆக குறையும் என பரிந்துரைக்கப்பட்டது. இது சொகுசு கார் வாங்க விரும்புவோரை சற்றே காத்திருக்கலாமே என்ற யோசனைக்குள் தள்ளியது. அதன்படி, பெரும்பாலானோர் விலை குறைப்பு நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர். சிலர் ஏற்கனவே முன்பதிவு செய்த வாகனங்களையும் ரத்து செய்துள்ளனர். இதில் லேண்ட் ரோவர், ஜாகுவார், ரோல்ஸ் ராய்ஸ், பெண்ட்லே மற்றும் ஆஸ்டன் மார்டின் ஆகிய கார் ப்ராண்ட்கள் அடங்கும்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானபோது எடுத்த புகைப்படம்
சந்தையில் தாக்கம்:
கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் முன்பதிவுகள், இந்திய சந்தைக்கான மதிப்பை குறைப்பதாக டீலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தனித்துவமாக தெரிவதற்காக சொகுசு கார் நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையிலான கார்களையே உற்பத்தி செய்யும். இந்நிலையில் இந்தியாவில் தற்போது நிலவும் சூழலால், சொகுசு கார் நிறுவனங்கள் தங்களது கவனத்தை மற்ற நாடுகள் பக்கம் திருப்பியுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
டீலர்கள் சொல்வது என்ன?
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காருக்கு, அந்நாட்டை காட்டிலும் குறைந்தது 3 மடங்கு கூடுதல் விலையை இந்திய பயனர்கள் செலுத்த வேண்டியுள்ளது. இறக்குமதி வரி என்பது மட்டுமின்றி, உள்ளூர் வரி மற்றும் பதிவு கட்டணம் ஆகியவை காரின் விலையை தாறுமாறாக உயர்த்துகின்றன. இதனால் வரிக்குறைப்புக்கு மக்கள் காத்திருக்க தொடங்கியுள்ளதால், விற்பனை சரிந்து இருப்பது டீலர்களை கவலைகொள்ள செய்துள்ளது. இதுதொடர்பாக பேசுகையில், “தற்போது சொகுசு கார் வாங்குவது என்பது எந்தவிதத்திலும் நஷ்டமாகாது. வர்த்த ஒப்பந்தம் முழு வீச்சில் பயன்பாட்டிற்கு வர கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகலாம். 10 சதவிகிதம் வரை வரி குறையும் என துல்லியமாக சொல்ல முடியாது. இது படிப்படியாக குறையலாம். உதாரணமாக வருடத்திற்கு இத்தனை சதவிகிதம் என வரி குறைக்கப்படலாம்” என டீலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காத்திருப்பால் அபாயம்?
ஆடம்பர கார்களின் விலை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 5% அதிகரிப்பதால், வாங்குபவர்கள் அதிக நேரம் காத்திருப்பது அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம். இங்கிலாந்து பவுண்டிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதும் செலவுகளை அதிகரிக்கச் செய்கிறது. இறக்குமதி வரி குறைப்பு முழுமையாக அமலுக்கு வருவதற்கு முன்பு, ஆண்டுதோறும் விலை உயர்வு மற்றும் நாணய ஏற்ற இறக்கங்கள் காரணமாக வாங்குபவர்கள் காருக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதேநேரம், இந்த வரி குறைப்பு சலுகையானது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட கார்களுக்கே பொருந்தும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.




















