BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
IND Vs PAK Asia Cup 2025: கடுமையான எதிர்ப்புகள் எழுந்தாலும் ஆசிய கோப்பையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்ய முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

IND Vs PAK Asia Cup 2025: பிசிசிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல்,ஒரு சுதந்திரமான அமைப்பாகவே இன்று வரை தொடர்கிறது.
மலையாய் குவியும் எதிர்ப்புகள்:
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே, ஏராளமான எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனாலும், வரும் செப்டம்பர் 14ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள போட்டி கட்டாயம் நடந்தே தீரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பேசும் பிசிசிஐ வாட்டாரங்கள், “இது இருநாடுகளுக்கு இடையேயான போட்டிகள் கிடையாது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் போட்டி. ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் உடனான ஆட்டத்தை விளையாட மறுத்தால், அது அந்த அணிக்கு சாதகமாக மாறிவிடும். அதாவது அவர்களுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என குறிப்பிடுகின்றன.
கட்டுப்பாடில்லாமல் ஆடும் பிசிசிஐ:
பைசரன் பள்ளத்தாக்கில் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் கூட வெடித்தது. அடுத்த சில மாதங்களிலேயே இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் திட்டமிடப்பட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய சூழல் வரை இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பிசிசிஐ என்ன முடிவு எடுக்க வேண்டும் என இந்திய அரசால் உத்தரவிட முடியாது. மக்களின் உணர்விற்கு முக்கியத்துவம் கொடுத்து பிசிசிஐ என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதேநேரம், மக்களின் உணர்ச்சியை பணமாக்க பிசிசிஐ முயற்சிப்பதாக இணையவாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதிகாரமில்லாத மத்திய அரசு:
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேசிய விளையாட்டுகள் நிர்வாக மசோதா, சட்டமாக்கப்பட்டால் மட்டுமே பிசிசிஐ தொடர்பான நிர்வாக முடிவுகளில் மத்திய அரசால் ஈடுபட முடியும். ஆனால், அதற்கு இன்னும் சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இருநாடுகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு தற்போது வரை வாய்ப்பில்லை என மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இருப்பினும், அரசியல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு எந்தவொரு நாட்டிற்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கக் கூடாது என ஒலிம்பிக் சாசனம் குறிப்பிடுகிறது. 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விரும்பும் இந்தியா, இந்த விதிகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும். அதோடு, இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் விளையாட்டு, 2028ம் ஆண்டு முதல் டி20 வடிவில் ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்ட மசோதா சொல்வது என்ன?
புதிய தேசிய விளையாட்டுகள் நிர்வாக மசோதாவானது “அசாதாரண சூழ்நிலைகள்" மற்றும் "தேசிய நலன்" காரணமாக தேவைப்படும்போது, இந்திய அணிகள் மற்றும் தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் சர்வதேச பங்கேற்பில் விளையாட்டு அமைச்சகம் தலையிட்டு "நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க" மத்திய அரசுக்கு வாய்ப்பளிக்கிறது. இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறாவிட்டால், ஒளிபரப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு கடும் இழப்பு ஏற்படக்கூடும். அதோடு, ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் மற்ற உறுப்பு நாடுகளின் வருவாயையும் கணிசமாக பாதிக்கும் என கூறப்படுகிறது.




















