ADMK BJP Alliance | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை. எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டும் என்று இபிஎஸ் பேசியிருப்பது தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
தமிழ் நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே இதற்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தொடங்கி விட்டன. அந்தவகையில் ஓரணியில் தமிழ் நாடு என்ற பிரச்சாரத்தை ஆளும் திமுக கையிலெடுத்திருக்கிறது. அதேபோல், அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை தீவிர படித்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக டெல்டா மாவட்டங்களில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். திருத்துறை பூண்டியில் நேற்று பிரச்சாரம் செய்த இபிஎஸ், “ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம். எதைபற்றியும் கவலைப்படவில்லை” என்று கூறினார். இது தான் தற்போது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் பாஜகவினர் தொடர்ந்து 2026-ல் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறிவருகின்றனர். மறுபுறம் அதிமுக கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை அழுத்தமாக குறிவருகிறது. இப்படி கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகள் சேர்ந்து ஒரு முடிவு எடுக்காமல் மாறி மாறி பேசி வருவது அக்கட்சி தொண்டர்களிடையே குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தல் வரை நிலைக்குமா? இல்லை கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உடைந்ததைப்போல் உடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.





















