DMK Statement: “எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
ஓரணியில் தமிழ்நாடு முகாமை எதிர்த்து அதிமுக வழக்கு தொடர்ந்த நிலையில், OTP பெறுவதற்கு மட்டும் தடை விதித்து, முகாமை தொடர நீதிமன்றம் அனுமதித்த நிலையில், அதிமுகவை விமர்சித்து திமுக அறிக்கை வெளியாகியுள்ளது.

திமுக நடத்திவரும் ‘ஓரணியில் தமிழ்நாடு‘ உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு தடை கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில், OTP பெறுவதற்கு மட்டும் தடை விதித்தது நீதிமன்றம். ஆனால் முகாமிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுகவை, குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து, திமுக சார்பில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“அதிமுக முகத்தில் கரியை பூசிய நீதிமன்றம்“
ஓரணியில் தமிழ்நாடு குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை மாண்புமிகு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் ஜுன் 1 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்த நாள் முதல் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சியையும், அடிமை அதிமுகவின் துரோகங்களையும் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள், மாண்புமிகு முதல்வர் பின்னால் ஓரணியில் தமிழ்நாடு என அணி அணியாய் அணிவகுத்து நிற்கத் தொடங்கினர்.
அதோடு, எல்லார்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கோடு திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராத குடும்பங்களே கிடையாது என்ற அளவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் பார்த்து பார்த்து கவனித்து வருவதால், தமிழ்நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக கழகத்தில் இணைந்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார் ஆர்.எஸ். பாரதி.
மேலும், தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும், அதிமுக வினருமே கூட மாண்புமிகு முதலமைச்சர் பின்னால் அணிதிரள்வதைக் கண்டு தாங்க முடியாமல் அரண்டுபோய் அவதூறுகளை பரப்பி மக்களை குழப்ப பார்த்து அதில் தோற்றுப்போனதால், நீதிமன்றத்திற்கு சென்று, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி. நீதிமன்றத்தை நாடி தடைவாங்க முயன்ற அதிமுகவிற்கு மாண்பமை நீதிமன்றம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது.
மேலும், OTP மட்டும் கேட்காமல் வழக்கம் போல உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதித்துள்ளது நீதிமன்றம். இப்படி கழக உறுப்பினர் சேர்க்கையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் பதட்டமே ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
“அதிமுக-பாஜக-வின் சதிச் செயலை நீதிமன்றமே முறியடித்தது“
கழக உறுப்பினர் சேர்க்கையைத் தடுக்க நினைத்த அதிமுக, பாஜகவின் சதிச் செயலை நீதிமன்றமே முறியடித்த பின்னும், “சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்” என்ற வகையில் OTP பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுகிறது அடிமைகள் கூட்டம். வேடிக்கை.!
திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பான ஆட்சியை முன்வைத்து தன்னெழுச்சியாக பொது மக்கள் தங்களை கழக உறுப்பினராக இணைத்து வருகின்றனர். அதில் OTP பெறுவது என்பது உறுதிப்படுத்தலுக்கான ஒரு சிறு நடைமுறை மட்டுமே. எனினும் நீதிமன்ற வழிகாட்டலை மதித்து அந்த நடமுறைக்கு மாற்றாக கீழ்காணும் நடமுறையை கடைபிடித்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளுமாறு கழக உடன் பிறப்புகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய வழிமுறைகள்
மக்களுடன் ஸ்டாலின் App-ஐ அனைவரும் Update செய்து கொள்ளுங்கள்.
1) OTP கேட்கும் முறை தற்போது இல்லை.
2) அலைபேசி எண் கட்டாயம்.
3) தற்போதைக்கு, ஒரு குடும்பத்திற்கு ஒரு போன் நம்பரில் 1:4 என்ற அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கலாம்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு அலைபேசி எண் என்ற முறை வந்துள்ளது. ஆனால், வாய்ப்பு இருக்கும் இடங்களில் கிடைக்கின்ற அனைத்து அலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்ளவும்.
அலைப்பேசி எண் தவறாகவோ அல்லது அந்த குடும்பத்தில் இல்லாத நபரின் எண்ணாகவோ இருந்தால், உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்ட அனைத்து தரவுகளும் நீக்கப்பட்டு, இப்பணியை மீண்டும் தொடக்கத்தில் இருந்து தொடங்கிட வேண்டும் என்பதால், பெறப்படும் அலைபேசி எண்ணின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது அவசியம்.
அலைப்பேசி எண்ணைப் பதிவிட்டு சமர்பித்தால் உறுப்பினர் சேர்க்கை முடிவடையும். அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து முழுமையாக கணக்கெடுப்புகளை முடிக்க வேண்டும்.
எதிரிகளின் பயமே நமது வெற்றி. 2026 லும் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களது தலைமையில் திராவிட மாடல் 2.o ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு, ஆர்.எஸ். பாரதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.





















