குத்து ரம்யாவுக்கு ஆபாச மெசேஜ்.. அந்த 11 பேர் தான் வக்கிரமானவர்கள்.. நடிகையின் இன்ஸ்டா பதிவு
கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் பிரபல நடிகைக்கு மிக மோசமான வார்த்தையில் மெசேஜ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது டெவில் படத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், அவரது ஜாமீனை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் கர்நாடகா உயர் நீதிமன்றம் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தது. நிபந்தனை ஜாமீனை படிக்கும்போதே நடிகர் தர்ஷனை விடுதலை செய்வதற்கு தயார் செய்யப்பட்ட படிவம் போலவே இருப்பதாக கடுமையாக விமர்சித்தது. மேலும் இதுதொடர்பான வழக்கை ஒத்தி வைத்து முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குத்து படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ரம்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக கருத்து பதிவிட்டிருந்தார். இது நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சில ரசிகர்கள் நடிகை ரம்யாவுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி வசைபாடியதாகவும் கூறப்படுகிறது. ஆபாச மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்தும் வந்துள்ளனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ரம்யா தனக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய நபர்களின் பெயரையும் வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட ரம்யா, தனக்கு தர்ஷனின் ரசிகர்கள் ஆபாச தகவல் அனுப்பி மோசமான வார்த்தையில் கருத்தை பதிவிடுகின்றனர். இதுபோன்றவர்கள் தான் பெண்களை வன்கொடுமை செய்வதாகவும் காட்டமாக சாடியுள்ளார். தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனக்கு ஆபாச தகவல் அனுப்பிய 11 பேரின் பக்கங்களையும் அவரின் மெசேஜ்களையும் ரம்யா பகிரங்கமாக பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரம்யாவின் ஆதரவாளர்கள் சமூகவலைதளத்தில் 11 பேரையும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.





















