தெருவிற்குள் வரக்கூடாது என்று சொல்வது மாதிரி..பா ரஞ்சித் முன் அமீருக்கு பதிலடி கொடுத்த கொட்டுக்காளி இயக்குநர்
கொட்டுக்காளி படத்தை திரையரங்கில் வெளியிட்டது தவறு என இயக்குநர் அமீரின் கருத்திற்கு படத்தின் இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் பதிலளித்துள்ளார்

கொட்டுக்காளி
கூழாங்கல் படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனமீர்த்தவர் இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நாயகனாக நடித்த கொட்டுக்காளி படத்தை இயக்கினார். இந்த படமும் சர்வதேச தளங்களில் பல விருதுகளை வென்றது. தமிழ்நாட்டில் இப்படம் கடந்த ஆண்டு திரையரங்கிலும் வெளியாகியது.
கொட்டுக்காளி பற்றி இயக்குநர் அமீர் கருத்து
சூரி நடித்த முந்தைய படங்களான விடுதலை மற்றும் கருடன் ஆகிய படங்கள் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் தங்கள் எதிர்பார்த்த படமாக கொட்டுக்காளி இல்லாதது குறித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஆதங்கத்தை அதிகப்படுத்தும் வகையில் அமைந்தது இயக்குநர் அமீரின் பேச்சு. வாழை படம் வெகுஜன சினிமாவிற்கு பக்கத்தில் இருப்பதாகவும் ஆனால் கொட்டுக்காளி படம் ஃபெஸ்டிவலுக்காக உருவான படம் என்றும் அந்த படத்தை வெகுஜன சினிமாவுடன் போட்டிபோட வைப்பது அந்த படத்திற்கே செய்யும் வன்முறை என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் சூரி அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இப்படியான சூழலில் இந்த மாதிரியான படத்தை வெளியிடுவது சூரிக்கு சிவகார்த்திகேயன் செய்யும் துரோகம் என அவர் தெரிவித்திருந்தார். அமீரின் கருத்திற்கு கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து எதிர் கருத்து தெரிவித்துள்ளார் கொட்டுக்காளி இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ்
மனக்கோளாறாக பார்க்கிறேன்
பா ரஞ்சித் ஒருங்கிணைத்த பி.கே ரோஸி திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரையிடல் முடிந்தபின் பேசிய பி.எஸ் வினோத்ராஜ் இப்படி கூறினார் "74 வருடம் பாரம்பரியம் உள்ள பெர்லின் திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படம் திரையிடப்பட்டது கொட்டுக்காளி ரிலீஸ் நேரத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தது. அது எல்லா படத்திற்கு நடப்பதுதான். ரசிகர்களுக்கு இந்த மாதிரியான படங்கள் பார்த்து பழக்கமில்லை அதனால் அவர்களுக்கு புரியவில்லை என்று நான் எடுத்துக் கொண்டேன். ஆனால் தமிழ் சினிமாத் துறையில் இருந்து வந்த அம்புதான் நான் எதிர்பார்க்காதது. இந்த மாதிரி படம் எடுத்தால் யார் யார் எல்லாம் ஆதரிப்பார்களோ அவர்களிடம் இருந்து எதிர்ப்பு வருகிறது. இந்த மாதிரியான படங்கள் தான் தியேட்டருக்கு வரனும் இந்த மாதிரி படங்கள் தியேட்டருக்கு வரக்கூடாது அப்போது முக்கியமான ஒரு வாதமாக முன்வைக்கப்பட்டது. நான் அதை இந்த தெருவிற்குள் நீ வரக்கூடாது என்று சொவதற்கு ஒப்பானதாக பார்க்கிறேன் . அதை ஒரு பெரிய மனக்கோளாறாக தான் பார்க்கிறேன் . சினிமாவை ஒரு ஆடம்பரமாக தான் பார்த்து வளர்ந்தவன். அப்படி இருக்கையில் நான் இரண்டு படங்கள் எடுத்ததே எனக்கு மகிழ்ச்சிதான். 10 லட்சம் இருந்தால் அடுத்த படத்தை எடுப்பேன். ரஞ்சித் அண்ணனே எனக்கு கொடுப்பார்" என வினோத் ராஜ் பேசினார்

