MR Vijayabaskar Brother Arrest | நில மோசடி வழக்கு..விஜயபாஸ்கர் தம்பி கைது! சிபிசிஐடி அதிரடி!
கரூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கரின் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, போலி ஆவணங்கள் தயார்த்து சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் என்பவர் உட்பட 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்ட்டார். இவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் இருந்து, தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை இன்று கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்கு தொடர்பாக முகாந்திரம் இருப்பின் இவர்களை கைது செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று கரூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.