தஞ்சையில் அதிர்ச்சி! 5 ஆண்டுகளில் 170 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு: பெற்றோர்களே உஷார்!
நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களை எளிய முறையில் தவிர்க்க முடியும். தஞ்சை மாவட்டத்தில் தீ விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விடவும் நீர் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகம்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 170 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்புப் படை உதவி மாவட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகளை நோக்கி பொதுமக்கள்
கல்லணையில் இருந்து கடந்த மாதம் ஜூன் 15ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள், குளங்கள், கிணறுகள் நிரம்பி நீர்நிலைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கோடை காலம் முடிந்த பிறகும் தஞ்சையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் விடுமுறை தினங்களில் நீர்நிலைகளை தேடி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

நீச்சல் தெரிந்தவர்களுக்கு நீர்நிலைகளில் தண்ணீர் வந்தால் கொண்டாட்டம் தான். ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் உற்சாகம் ஊற்றெடுத்து நீருக்குள் இறங்கி குளிக்கின்றனர். ஆழமான பகுதிக்கு சென்று ஆபத்தில் சிக்கி உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனால்தான் ஆறுகளில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. அதனால் பொதுமக்கள் யாரும் ஆறுகளில் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் இதை உதாசீனப்படுத்துகின்றனர். முக்கியமாக வாலிபர்கள் ஆறுகளில் குளித்து தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் முருகேசன் கூறியதாவது:
தீ விபத்துகள் எதிர்பாராமல் நிகழ்வது. ஆனால் நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களை எளிய முறையில் தவிர்க்க முடியும். தஞ்சை மாவட்டத்தில் தீ விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விடவும் நீர் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகம்.
நீர்நிலைகளில் நீச்சல் தெரியாமல் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் தீயணப்புத்துறை சார்பில் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குழந்தைகளுக்கு கட்டாயம் நீச்சல் கற்று கொடுக்க வேண்டும். நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் இறங்கி பறிபோன உயிர்கள் ஏராளம்.
வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் போது நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். குளம், கிணறுகள், கல்குவாரிகள் அமைத்த இடங்களில் உள்ள கல்குட்டைகள் மிகவும் ஆபத்தானவை. விளையாட செல்லும் சிறுவர்கள் அங்கு தேங்கி நிற்கும் நீரின் அழகை பார்த்த ஆனந்தத்தில் அதில் இறங்கி குளிக்கும் போது ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
170 பேர் உயிரிழப்பு
விடுமுறை நாட்களில் குழந்தைகள் எங்கே விளையாட செல்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து குழந்தைகளிடம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சையில் கடந்த 5 ஆண்டுகளில் நீர் நிலைகளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களால் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதே போல கும்பகோணத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். திருக்காட்டுப்பள்ளியில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். பாபநாசத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். திருவிடைமருதூரில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். ஒரத்தநாட்டில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். பேராவூரணியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். திருவையாறில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நீர்நிலைகளில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் தீயணைப்பு படை வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 நாட்களில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் ஆறுகளில் மூழ்கி 2 பேரும், குளத்தில் மூழ்கி 3 சிறுவர்களும் இறந்த சோகமும் நடந்துள்ளது.





















