Malampuzha: கோவைக்கு அருகே மலம்புழா அணையில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இருக்கா? ஒரு ஜாலி டூர் போய்ட்டுவாங்க..
மலம்புழா அணை கண்கவர் தோட்டம், குழந்தைகள் பூங்கா, தொங்கு பாலம், ரோவ் வே, படகு சவாரி, குழந்தைகளுக்கான இரயில் பயணம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளது.
கோவைக்கு அருகே குறைந்த செலவில் ஒரே நாளில் குடும்பத்துடன் சுற்றிப் பார்த்து மகிழ இடம் தேடுகிறீர்களா? இதோ, உங்களுக்காகவே இருக்கிறது மலம்புழா அணை. கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை, தமிழ்நாடு, கேரளா எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. கோவையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அணைக்கு, வாளையாறு வழியாக ஒரு மணி நேர பயணத்தில் சென்று விட முடியும்.
கேரள மாநிலத்திற்குள் இந்த அணை அமைந்து இருந்தாலும், இந்த அணையையும் கட்டியது காமராஜர் தான். அப்போது மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த பாலக்காடு மாவட்டத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் கேரளாவின் இரண்டாவது பெரிய நதியான பாரதபுழா ஆற்றின் துணை ஆறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையை, அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜர் தான் திறந்து வைத்தார். காமராஜர் திறந்து வைத்ததற்கான கல்வெட்டினை, அணை பூங்காவில் இன்றும் காணமுடியும். விவசாயத்திற்கான பாசன நீரையும், குடிநீரையும் தரும் இந்த அணை, சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வருகிறது. மொழி பிரச்சனைக்கு வாய்ப்பே இல்லாத வகையில், சுற்றியெங்கும் தமிழும், தமிழர்களும் நிறைந்துள்ளனர்.
பூங்காவும், தொங்குபாலமும்
மலம்புழா அணை 28.5 ஏக்கர் பரப்பளவில் கண்கவர் தோட்டம், குழந்தைகள் பூங்கா, தொங்கு பாலம், ரோவ் வே, படகு சவாரி, குழந்தைகளுக்கான இரயில் பயணம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளது. அணைக்கு மிக அருகில் மீன் வளர்ப்புத் தொட்டி, பாம்புப் பூங்கா, ஜப்பானீஸ் பூங்கா, பாறைப் பூங்கா ஆகியவையும் அமைந்துள்ளது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாயும், 3முதல் 12வயது வரையிலான சிறுவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
புல்வெளிகள், பூச்செடிகள் செயற்கை நீரூற்றுகள் என அனைவரையும் கவரும் வண்ணம் அழகாக அமைக்கப்பட்டு உள்ளது. அணையின் ஒரு பகுதியில் இரண்டு இரும்பு தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக பயணித்தால் அணையின் மற்றொரு பகுதிக்கு செல்ல முடியும். அந்த பகுதியில் படகு சவாரி செய்து மகிழ படகு போக்குவரத்துக்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் விளையாட ஒரு மணி நேரத்திற்கு 75 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அணைக்குள்ளேயே நாள் முழுவதையும் கழித்து விட வேண்டாம். அணைக்கு வெளியேயும் சுற்றுலா பயணிகளை கவரும் பல வசதிகள் உள்ளது.
திரில்லான அனுபவம் தரும் ரோப் வே
அணைக்குள் இருக்கும் போது ரோவ் வேயில் பலர் பூங்காவின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதி வரை சென்று திரும்பி வருவதை பார்க்கலாம். ஆனால் அணைக்குள் இருந்து ரோப் வேவிற்கு செல்ல வழியில்லை என்பதால், வெளியே வந்து மேலேறி செல்ல வேண்டும். திரில்லான அனுபத்தை தரும் ரோப் வேயில் பயணிக்கவே ஒரு கூட்டம் மலம்புழா அணைக்கு வந்து செல்வது உண்டு.
ரோப் வேயில் பயணிக்க ஒரு நபருக்கு 71 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரோப் காரில் சென்றபடி அணை, மலம்புழா ஆறு, பூங்கா, தொங்கு பாலம் உள்ளிட்டவற்றின் அழகை மேல் இருந்தவாறு கண்டு ரசிப்பது அற்புதமான அனுபவத்தை தரும். ரோப் வே ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு சென்று திரும்பி வர 20 நிமிடங்கள் ஆகும். அந்த ஒவ்வொரு நிமிடமும் இயற்கையின் உன்னதமான அழகை வேறொரு கோணத்தில் இருந்து பார்க்க வகை செய்யும்.
மீன் அருங்காட்சியகமும், பாம்பு பண்ணையும்
மலம்புழா அணையை ஒட்டி மீன் அருங்காட்சியகமும், பாம்பு பண்ணையும் அமைந்துள்ளது. பாம்பு பண்ணைக்கு செல்ல நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 25 ரூபாயும், சிறியவர்களுக்கு 15 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. காப்பகத்தில் பாம்புகளை விஷம் உள்ள விஷம் அற்ற என இருவகைகளாக பிரித்து தனி தனி கண்ணாடி கூண்டில் அடைத்து பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். சாரை பாம்பு, நாக பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், மலை பாம்பு என பல வகை பாம்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கூடவே அப்பாம்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
ரோப் வே செல்லும் வழியில் மீன் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அங்கு சிறிய சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பல வகையான பல வண்ண மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கூடவே அந்த மீன்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இருண்ட அறையில் கண்ணாடி பெட்டிகளுக்குள் நீந்தி திரியும் பல வகையான பல வண்ண மீன்களை கண்டு இரசிக்க முடியும். குறிப்பாக குழந்தைகளுக்கு உற்சாகம் தரும் வகையில் அமைந்திருக்கும்.
குடும்பத்துடன் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத சிறப்பான பயணமாக மலம்புழா சுற்றுலா அமையும்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/