வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
கண்ணாடி அணியும் மாணவர்கள், இப்படி பக்கவாட்டில் திரும்பும்போது, கண்ணாடியின் மையப் பகுதியில் (Optic Centre) பார்க்காமல், அதன் ஓரப் பகுதியின் வழியே பார்க்க நேரிடும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், ஒன்றன்பின் ஒன்றாக உள்ள இருக்கை முறைக்கு பதிலாக, ப வடிவ இருக்கை முறை அறிமுகம் செய்யப்படுவதாக, அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி ’’மாணவர்களில், கடைசி இருக்கை மாணவர்கள் இருக்க மாட்டார்கள், கவனச் சிதறல் இருக்காது, கற்றல் திறன் மேம்படும்’, குழு விவாதம், வினா விடை அமர்வுகள், சக கற்றல் ஆகியவற்றை ஊக்குவிக்கும்.
பிற மாணவர்கள் சக மாணவர்களிடம் பேசவும் பார்க்கவும் உதவும், ஆசிரியர்கள் எளிதில் மாணவர்களுடன் கலந்துரையாட முடியும், வகுப்பறை பங்கேற்றலை உறுதி செய்யும்’’ என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்து இருந்தது. எனினும் ப வடிவ இருக்கை முறை, பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடும் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
ஆசிரியர்களை முறையாக நியமனம் செய்யுங்கள்
இதுகுறித்து எதிர்க் கட்சிகளான பாஜக, பாமக உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்து இருந்தன. இருக்கை முறையை மாற்றுவதற்கு பதில், ஆசிரியர்களை முறையாக நியமனம் செய்யுங்கள் என்று அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். மேலும் இந்த முறையால் உடல்நல மற்றும் கல்விசார் சிக்கல்கள் ஏற்படும் என்று பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சூர்யா எச்சரித்து இருந்தார்.
”ப வடிவ அமைப்பின் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் மாணவர்கள், கரும்பலகையைப் பார்க்க வேண்டுமானால், நாள் முழுவதும் தங்கள் கழுத்தையும், தோள்பட்டையையும் ஒரே பக்கமாகத் திருப்பி வைத்திருக்க வேண்டும். இந்த தொடர்ச்சியான அழுத்தம், கடுமையான கழுத்து வலி, தோள்பட்டை வலியோடு நின்றுவிடாமல், எதிர்காலத்தில் குணப்படுத்தக் கடினமான 'செர்விக்கல்' (Cervical Spondylitis) தண்டுவடப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
கண்ணாடி அணியும் மாணவர்களுக்குக் கூடுதல் பாதிப்பு
கண்ணாடி அணியும் மாணவர்கள், இப்படி பக்கவாட்டில் திரும்பும்போது, கண்ணாடியின் மையப் பகுதியில் (Optic Centre) பார்க்காமல், அதன் ஓரப் பகுதியின் வழியே பார்க்க நேரிடும். இது அவர்களின் கண்களுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் (Eye Strain) கொடுத்து, பார்வைத் திறனை மேலும் பாதிக்கும், கடுமையான தலைவலியை உருவாக்கும்’’ என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், ப வடிவ இருக்கை முறையில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து 24 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட மகளிரணிச் செயலாளருமான உமா மகேஸ்வரி ஏபிபி நாடுவிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எல்லா இடங்களுக்கும் பொருந்தாது
’’வகுப்பறைகளில் ’ப’ வடிவ இருக்கை முறை எல்லா இடங்களுக்கும் பொருந்தாது. தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் இதைச் செயல்படுத்த மாட்டார்கள்.
போதிய இட வசதி இல்லாத அரசுப் பள்ளி வகுப்புகளில் இதனால், உடலளவிலும் மனதளவிலும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அரசுப் பள்ளி வகுப்புகளில் குறைந்தபட்சம் 50 பேர் படிக்கிறார்கள் எனும்போது, கடும் சிரமத்தை ஏற்படுத்தும்.
ப வடிவ இருக்கை முறை எங்கெலாம் பயன்படும்?
இந்த இருக்கை முறை கதை சொல்லவும் விளையாடும் நேரங்களிலும் பயன்படும். வகுப்பறைக் கற்றலுக்கு ஒத்துவராது. தனி நாற்காலி இருந்தால் வேண்டுமானால் இந்த முறை சரியாக இருக்கும். பெஞ்ச் வடிவ இருக்கைகளில் முதுகு தண்டுவடத்தை திருப்பிக்கொண்டே மாணவர்கள் அமர்ந்திருக்க வேண்டும் என்பதால் கழுத்து வலி, பின்புற வலி உண்டாக வாய்ப்புண்டு. கண் பிரச்சினை கூட ஏற்படலாம்.
கரும்பலகையைப் பயன்படுத்தக் கூடிய வகுப்பறை கற்றலுக்கு, இந்த முறை உதவவே உதவாது. உரையாடலுக்கு, பாட்டுப் பாட, நடிக்க மட்டுமே உதவும்.
பழைய இருக்கை நடைமுறையில் பிரச்சினைகள் உண்டு என்று அறிவியல்பூர்வமாகவோ, மருத்துவ ரீதியாகவோ யாரும் எதுவும் கூறவில்லை. இது தோல்விகரமான மாடல் என்று யாரும் சொன்னதில்லை’’ என்கிறார் ஆசிரியை உமா மகேஸ்வரி.
சாதிய ரீதியில் அமர வைக்கப்படும் மாணவர்கள்?
வகுப்பறைகளில் சாதிய ரீதியில் மாணவர்கள் அமர வைக்கப்படுவதாகவும் பின் வரிசை மாணவர்கள் கற்றலில் போதிய கவனம் செலுத்துவதில்லை எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே என்று கேட்டதற்கு,

அப்படிப் பார்த்தால் முன்னால் உட்கார்ந்திருக்கும் குழந்தைகளுக்கும் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக வகுப்புகளில், உயரம் அதிகமான குழந்தைகளைத்தான் பின்னால் அமர வைக்கிறோம். கவனம் கொடுக்க வேண்டிய குழந்தைகளை முன்னால்தான் உட்கார வைப்போம்.
சாதிய ரீதியாக குழந்தைகளை அமர வைப்பதாக என் 30 ஆண்டு கால அனுபவத்தில் நான் பார்த்ததில்லை. அரசுப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்தான் அதிகம் படிக்கிறார்கள் எனும் நிலையில், அதற்கு வாய்ப்பு குறைவே.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால், கடைசி பெஞ்ச் மாணவர்கள் நன்றாகப் படிக்காதவர்கள் என்ற கருத்துருவாக்கம் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் அப்படிப்பட்ட சூழல் இல்லை.
அரசு என்ன செய்ய வேண்டும்?
பள்ளி வகுப்பறைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத சூழல்தான் உள்ளது. இருந்தாலும் பல்வேறு வகையான பயிற்சிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டியுள்ளது. பள்ளிகளுக்கு உள்ளே இருக்கக் கூடிய விஷயங்களால்தான் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. அதை சரிசெய்தாலே போதும்.
ப வடிவ இருக்கை முறை சாத்தியமில்லையா?
பெரிய வகுப்பறைகள், தனித்தனி இருக்கைகள், வகுப்பறைக்கு 20 மாணவர்கள் என்றால் மட்டுமே இந்த இருக்கை முறை சரியாக இருக்கும். சாத்தியப்படும்’’ என்று அரசுப்பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
அரசு ஒரு திட்டத்தைப் புதிதாக அறிமுகம் செய்யும்போது, அதன் சாதக, பாதகங்களை தீர அலசி, ஆராய்ந்து பார்த்த பிறகே அமல்படுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






















