Tamil Thalaivas: 10வது முறையாக ஹரியானா அணிக்கு எதிராக களமிறங்கும் தமிழ் தலைவாஸ்; சம்பவம் செய்யுமா?
Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது.
ப்ரோ கபடி லீக் தற்போது மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் ஆட்டம் ஒவ்வொரு போட்டிக்கும் மிகவும் பரபரப்பாகவும் எதிரணிக்கு சவால் அளிக்கும் வகையிலும் இருந்து வருகின்றது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள தமிழ் தலைவாஸ் அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் கடைசி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக இறுதிவரை சவாலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஒரு புள்ளியில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு மட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் தலைவாஸ் அணி இன்று அதாவது டிசம்பர் 25ஆம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது. இந்த போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி சரியாக இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர், பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ஹரியானா அணி 4 முறை வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல் 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்த சீசனில் 6 போட்டிகளில் 45 ரெய்டு புள்ளிகளை குவித்த அஜிங்க்யா பவார் தமிழ் தலைவாஸின் முக்கியமான ரெய்டராக உள்ளார். அதேபோல் டிஃபெண்டரில் தமிழ் தலைவாஸ் அணிக்கு சாஹில் குலியா மிகவும் முக்கியமான வீரராக உள்ளார். இவர் கடந்த 6 போட்டிகளில் மட்டும் 20 புள்ளிகளை அணி எடுக்க முக்கிய காரணமாக உள்ளார்.
ஹரியாணா அணியைப் பொறுத்தவரையில் வினய் முக்கிய ரெய்டராக உள்ளார். இவர் கடந்த 6 போட்டிகளில் 50 ரெய்டு பாய்ண்டுகள் எடுத்துள்ளார். அதேபோல் டிஃபெண்டரில் மொஹித் 6 போட்டிகளில் 18 புள்ளிகள் அணிக்கு சேர்த்துள்ளார். அதேபோல் ஆஷிஷ் 6 போட்டிகளில் 17 புள்ளிகள் சேர்த்து ஹரியானா அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார்.
இந்நிலையில் தனது சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸ் அணி ஹரியானா அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளதால் இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றியை பெற்று ஹரியானா அணிக்கு பதிலடி கொடுக்கும் என தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் எதிர்பாத்து காத்துக்கொண்டுள்ளனர்.