IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு 135 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், இங்கிலாந்து அணி பந்துவீச்சில் மிரட்டி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. வாஷிங்டன் சுந்தர் அபாரமான சுழலில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை சரித்தார்.
4 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா:
இதையடுத்து, 193 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் குடைச்சல் கொடுத்தனர். இங்கிலாந்து வேகத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். ஜெய்ஸ்வால் ஆர்ச்சர் வேகத்தில் டக் அவுட்டாக, கருண் நாயர் 14 ரன்களுக்கும், கேப்டன் சுப்மன்கில் 6 ரன்களுக்கும் அவுட்டாக நைட் வாட்ச்மேனாக வந்த 1 ரன்னில் அவுட்டானார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
135 ரன்கள் தேவை:
இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. கையில் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. போட்டியின் கடைசி நாளான இன்று வெற்றிக்காக இரு அணிகளும் ஆர்வம் காட்டுவார்கள். மைதானம் வேகப்பந்துவீச்சிற்கு மிகுந்த ஒத்துழைப்பு அளிப்பதால், இந்திய அணிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.
சவாலை சமாளிக்குமா இந்தியா?
கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ப்ரைடன் கர்ஸ் என இந்திய பேட்டிங்கை ஆட்டிவைக்க இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் காத்துள்ளனர். இவர்களுடன் சுழல் தாக்குதல் நடத்த ஷோயிப் பஷீர், ஜோ ரூட்டும் உள்ளனர். இவர்களை சமாளிப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் ஆகும்.
ஜெய்ஸ்வால், கருண் நாயர், சுப்மன்கில் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் அவுட்டாகிய நிலையில், ஆறுதல் தரும் விதமாக கே.எல்.ராகுல் நிலைத்து நிற்கிறார். தற்போது ரிஷப்பண்ட், நிதிஷ் ரெட்டி, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்டிங்கில் இருக்கிறார்கள்.
காப்பாற்றப்போவது யார்?
நிலையான மற்றும் நீடித்த பார்ட்னர்ஷிப் இருந்தால் மட்டுமே கடைசி நாளான இன்று இந்திய அணி இலக்கை எட்ட முடியும். இன்றைய போட்டியைப் பாெறுத்தமட்டில் ஆட்டத்தை கே.எல்.ராகுல் - ரிஷப்பண்ட் தொடங்க உள்ளனர். ரிஷப்பண்ட் தனது அதிரடியால் ரன்களை குவித்தால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முன்கள வீரர்களை காட்டிலும் ரிஷப்பண்ட், ஜடேஜா ஆகியோர் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பலமான ஒன்றாக மாறியுள்ளது. அவர்கள் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.
சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில், இதுபோன்று வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான மைதானத்தில் ஒரே நாளில் 135 ரன்கள் எடுப்பது என்பது மிகவும் சவாலானது ஆகும்.
இதனால், இங்கிலாந்து வேகத்தையும், சுழலையும் சமாளித்து இந்திய அணியை இந்த டெஸ்டில் வெற்றி பெற வைக்கப்போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெறும்.




















