Nimisha Priya: காத்திருக்கும் தூக்குக் கயிறு; ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா.? நியாயம் என்ன.?
ஏமனில், கொலை குற்றத்தில் மரண தண்டனை பெற்றுள்ள இந்திய செவிலியர் நிமிஷாவை காப்பாற்றுவது நியாயமா என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பும் நிலையில், நிமிஷா தரப்பு நியாயம் என்ன.? பார்க்கலாம்.

ஏமனில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த செவிலியர், அங்கு தனது பங்குதாரரை கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரை இந்திய அரசு தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், ஒரு கொலைக் குற்றவாளியை காப்பாற்றக் கோருவது நியாயமா என்றும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இரு தரப்பின் பின்னணி என்ன.? பார்க்கலாம்.
“நிமிஷாவை காப்பாற்றக் கோருவது நியாயமா.?“
ஏமனில் தனது பங்குதாரரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற இந்திய செவிலியர் நிமிஷா பிரியா தூக்கிலிடப்பட உள்ளது குறித்து கடந்த சில நாட்களாக இந்தியாவில் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. நிமிஷா பிரியா தூக்கிலிடப்படுவது குறித்து சில அமைப்புகள் மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற இந்திய அரசு இந்த வழக்கில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், நிமிஷா பிரியாவின் வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன, எந்த குற்றத்தில் ஏமன் நீதிமன்றம் வழக்கை விசாரித்து அவருக்கு மரண தண்டனை வழங்கியது என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம். மேலும், இந்த வழக்கில் இராஜதந்திர முயற்சிகள் நியாயமானதா இல்லையா என்பதையும் புரிந்துகொள்வது முக்கியம்.
ஏமனில் நடந்தது என்ன.?
கேரளாவைச் சேர்ந்த இந்திய செவிலியரான நிமிஷா பிரியா, 2008 முதல் ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில், நிமிஷா கேரளாவுக்குத் திரும்பி டாமி தாமஸை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, நிமிஷா பிரியா தனது கணவருடன் ஏமனுக்குத் திரும்பிச் சென்றார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு ஏமனில் நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக, நிமிஷாவின் கணவர் டாமி தாமஸ் தனது மகளுடன் கேரளாவுக்குத் திரும்பினார், ஆனால் நிமிஷா ஏமனில் தங்கினார்.
2015 ஆம் ஆண்டு நிமிஷா பிரியா அரசு மருத்துவமனையில் செவிலியராக இருந்த வேலையை விட்டுவிட்டு, உள்ளூர் மருத்துவமனையில் சேர்ந்தார். அவர் தொழிலதிபர் தலால் அப்தோ மெஹ்தியை பங்குதாரராக சேர்த்துக்கொண்டு, கூட்டாக தனது சொந்த மருத்துவமனையைத் திறந்தார். ஏமன் நீதிமன்ற ஆவணங்களின்படி, ஜூலை 2017 இல், நிமிஷா பிரியா தலால் அப்தோ மெஹ்தியை மயக்கமடையச் செய்து கொன்றுள்ளார்.
அதன் பிறகு, மற்றொரு செவிலியரின் உதவியுடன், மெஹ்தியின் உடலை துண்டு துண்டாக வெட்டி, பாலிதீன் பைகளில் அடைத்து, ஒரு தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளனர். மெஹ்தியின் கொலையின் ரகசியம் வெளிவந்த பிறகு நிமிஷா கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்றத்தில், நிமிஷா தனது வாக்குமூலத்தில் கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். ஏமனில் உள்ள சனாவின் விசாரணை நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இந்த முடிவை நிமிஷா ஏமனில் சவால் செய்துள்ளார்.
காப்பாற்றும் முயற்சிகள் தோல்வி
நிமிஷா உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார், ஆனால் உச்ச நீதிமன்றமும் நிமிஷாவின் மேல்முறையீட்டை நிராகரித்து மரண தண்டனையை உறுதி செய்தது. பின்னர் நிமிஷா ஏமன் ஜனாதிபதியிடம் கருணை கோரி மேல்முறையீடு செய்தார், ஆனால் அதிபரும் நிமிஷாவுக்கு மன்னிப்பு கொடுக்க மறுத்துவிட்டார். இறந்த தலால் அப்தோ மெஹ்தியின் குடும்பத்தினர் குருதிப் பணத்தைக் கூட வாங்கத் தயாராக இல்லை. நிமிஷா பிரியாவுக்காக அனைத்து சட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவரது குற்றம் மிகப் பெரியதாக இருந்ததால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
பங்குதாரரை கொன்று, பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு தொட்டியில் வீசிய குற்றத்தை எப்படி நியாயப்படுத்த முடியும்? நிமிஷா பிரியா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடிமகள் என்பதற்காக, ஏமன் நாட்டு பிரஜையை கொன்ற கொடூரமான குற்றத்திற்காக அவளுக்கு மட்டும் மன்னிப்பு கிடைக்குமா? இப்படிப்பட்ட சூழ்நிலையில், நிமிஷா பிரியாவை விடுதலை செய்யும் முயற்சி எப்படி நியாயமானது என்று கூற முடியும் என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
நிமிஷா தரப்பின் வாதம் என்ன.?
இது ஒரு பக்கம் இருக்க, நிமிஷா தரப்பில் கூறப்படுவது என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஏமனில் தனது பங்குதாரராக நிமிஷா சேர்த்துக்கொண்ட மெஹ்தி, மருத்துவமனை தொடங்க ஒப்பந்தம் போட்டதிலிருந்து தனது வேலையை காட்டியதாக கூறப்படுகிறது.
அதாவது, அவர்கள் மொழியில் ஒப்பந்தம் இருந்த நிலையில், அவர் நீட்டிய இடத்திலெல்லாம் நிமிஷா கையெழுத்து போட்டதாக தெரிகிறது. அதன் பின்னர், மருத்துவமனையின் வருமானம் மொத்தத்தையும் மெஹ்தியே எடுத்துக்கொண்டதாகவும், நிமிஷாவிடம் இருந்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டு, உடல் ரீதியாகவும் அவரை கொடுமைப்படுத்தியதாக நிமிஷா தரப்பில் கூறுகின்றனர்.
அதோடு முக்கியமாக, நிமிஷாவின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை மெஹ்தி கைப்பற்றி வைத்திருந்ததாக தெரிகிறது. அவரிடமிருந்து பாஸ்போர்ட்டை மீட்கவே, நிமிஷா அவருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். ஆனால், அவர் ஓவர் டோஸ் ஆனதால், மெஹ்தி இறந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது, உடலை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார் நிமிஷா. இதுதான் அவரது தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த வாதத்தை ஏற்காத நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது என நிமிஷா தரப்பினர் கூறுகின்றனர்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நிமிஷா தரப்பின் காப்பாற்றும் முயற்சிகள் பலன் கொடுக்குமா.? இந்திய அரசு தலையிடுமா.? பார்க்கலாம்.





















