Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படமான வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படப்பிடிப்பில், ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் மரணம் அடைந்தார்.

தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர் பா.ரஞ்சித். இவர் தற்போது ஆர்யா, தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அதில், கார் ஒன்று விபத்தில் சிக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தில் இந்த காட்சி படமாக்கப்பட்டது.
ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்:
அப்போது, கார் ஸ்டண்ட் காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் காரை ஓட்டி வந்தார். கார் விபத்துக்குள்ளாகும் காட்சியின்படி, கார் பறந்து அந்தர்பல்டி அடிப்பது போல எடுக்கப்பட்டது. பின்னர், சென்று பார்த்தபோது சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் பேச்சு மூச்சில்லாமல் இருந்தார். இதைக்கண்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவர்கள மோகன்ராஜை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். கார் சண்டைக்காட்சியின்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை படக்குழுவினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் விசாரணை:
அட்டகத்தி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா ஆகிய படங்களை இயக்கினார். இந்த நிலையில், அவர் தற்போது ஆர்யா மற்றும் தினேஷ் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10ம் தேதி முதல் நடந்து வரும் இந்த படப்பிடிப்பு தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். வேட்டுவம் படம் பா.ரஞ்சித்தின் திரைப்படங்களைப் போல அரசியல், சமூக கருத்து நிறைந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. அவரது முதல் படத்தின் கதாநாயகன் தினேஷ் கபாலி படத்திற்கு பிறகு மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். சார்பட்டா படம் மூலமாக ஆர்யாவிற்கு மிகப்பெரிய புகழையும், பாராட்டுகளையும் பெற்றுத்தந்த பா.ரஞ்சித் மீண்டும் அவருக்கு இந்த படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.





















