Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் குடமுழுக்கு விழா நடந்தது. அப்போது, முருகா முருகா என்ற கோஷம் விண்ணதிர்ந்தது.

தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். அறுபடை வீடு கொண்ட பெருமை கொண்ட முருகனின் முதற்படை வீடு திருப்பரங்குன்றம் ஆகும். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜுலை 14ம் தேதி கும்பாபிஷேகம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கோலாகலமாக நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்:
இதன்படி, இன்று காலை லட்சோப லட்ச பக்தர்கள் முன்னிலையில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது. காலை 5.20 மணி முதல் காலை 6.10 மணிக்குள் இந்த கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்பு நடக்கும் இந்த கும்பாபிஷேகத்திற்காக கோயில் கோபுரங்கள் புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டு ஜொலித்தது.

விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்:
யாகசாலையில் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று குடமுழுக்குவின்போது கோயில் ராஜகோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. குடமுழுவிற்கு பிறகு நடக்கும் சிறப்பு பூஜை முடிந்து, இன்று காலை 7.30 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
குடமுழுக்கு விழாவில் ராஜகோபுரத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. குடமுழுக்கின்போது பக்தர்கள் முருகா.. முருகா என்றும், கந்தனுக்கு அரோகரா என்றும் பக்திப் பரவசத்தில் கரகோஷம் எழுப்பினர். வண்ணவிளக்குகளாலும், மலர்களாலும், தோரணங்களாலும் திருப்பரங்குன்றம் கோயில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
சிறப்புகட்டணம் ரத்து:
பக்தர்கள் வசதிக்காக இன்று மற்றும் நாளை திருப்பரங்குன்றம் கோயிலில் அனைத்து சிறப்பு கட்டண தரிசனம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்கள் பக்தர்கள் அனைவரும் பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்கும் விதமாக நேற்று முதலே திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
பக்திப் பரவசம்:

திருப்பரங்குன்றம் குடமுழுக்கை முன்னிட்டு பன்னிரு திருமுறைகள், முருகன் திருப்பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கப்பட்டு வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று குவிவார்கள் என்பதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு, கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கான வசதிகள் தடையின்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முருகப்பெருமானின் இரண்டாம் அறுபடை வீடான திருச்செந்தூரில் குடழுக்கு விழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வார இடைவெளியில் முருகப்பெருமானின் முதல் இரண்டு படைவீடுகளில் குடமுழுக்கு நடந்துள்ளது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















