First Black Woman Judge: அமெரிக்க வரலாற்றில் முதன்முறை.! உச்சநீதிமன்ற நீதிபதியாக கறுப்பின பெண்..! குவியும் பாராட்டு!!
அமெரிக்க வரலாற்றிலே முதன்முறையாக கறுப்பின பெண் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு ஏற்க உள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய உச்சநீதிமன்ற நீதிபதியாக கீடன்ஜி ப்ரவுன் ஜேக்சனை பரிந்துரைத்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் வரலாற்றிலே ஒரு கறுப்பின பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளது இதுவே முதன்முறை ஆகும். ப்ரவுன் ஜேக்சனை நீதிபதியாக பரிந்துரைத்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நமது தேசத்தின் பிரகாசமான சட்ட சிந்தனையாளர் என்று புகழாரம் சூடினார். மேலும், ஜேக்சன் ஒரு விதிவிலக்கான நீதிபதியாக இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ப்ரவுன் ஜேக்சன் நீதிமன்றத்தில் டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா சரகத்தின் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். 2013ம் ஆண்டு முதல் டி.சி.யின் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்தார். 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பரப்புரையின்போது, ஒரு கறுப்பின பெண்ணை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்படும் என்று ஜோ பைடன் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்போது ப்ரவுன் ஜேக்சன் தற்போது பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தற்போது 9 நீதிபதிகள் பதவியில் உள்ளனர். அவர்களில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனால் நியமிக்கப்பட்டவர் நீதிபதி ஸ்டீபன் ஜி பிரையர். அவர் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதனால், அவரது பதவியிடம் காலியானது. காலியான அவரது பதவியிடத்தில்தான் தற்போது ப்ரவுன் ஜேக்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள ப்ரவுன் ஜேக்சன், ஹார்வர்டு சட்ட கல்லூரியில் சட்டம் படித்துள்ளார். மேலும், கடந்த மாதம் ஓய்வு பெற்ற ப்ரெயரிடம் கிளார்க்காக பணியாற்றியுள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இதற்கு முன்பு கறுப்பினத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே நீதிபதியாக பொறுப்பு வகித்துள்ளனர். அவர்களில் துர்குட் மார்ஷல் கடந்த 1991ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு அடுத்து நியமிக்கப்பட்ட கிளாரன்ஸ் தாமஸ் தற்போதும் பதவியில் உள்ளார்.
ப்ரவுன் ஜேக்சன் அமெரிக்கா உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு ஏற்க உள்ள 6வது பெண் நீதிபதி ஆவார். இவர்களில் மூன்று பேர் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டனர். அதிபர் ஜோ பைடன் உச்சநீதிமன்ற நீதிபதியாக ப்ரவுன் ஜேக்சனை பரிந்துரைத்துள்ளதற்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி விமர்சனம் செய்துள்ளது. அதாவது ஜேக்சன் நியமனத்திற்கு தாங்கள் அவரது இனம் மற்றும் பாலினத்தால் எதிர்க்கவில்லை. நியமனம் என்பது தகுதி மற்றும் நீதித்துறை திறன் ஆகியவற்றால் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்