போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
காவல்துறையினர் மிகவும் மோசம் என்றும், காவல்நிலையங்களில் எது நடந்தாலும் நீதிமன்றத்திற்கு தெரியாது என்றும் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் தமிழ்நாடு முழுவதும் எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் காவல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
போலீஸ் மோசம்:
தந்தை மகன் இறப்பு, அஜித்குமா் மரணம் என எதற்குமே எந்த முதலமைச்சரும் பொறுப்பு ஏற்கமாட்டார்கள். போலீசாருக்கு அணுகுமுறை மிகவும் முக்கியம். தற்போது நரி போல போலீசாரை கடித்து குதறுகிறார்கள். போலீஸ் துறை தடம்புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. போலீசாரின் செயல்பாடுகள் மிகவும் மோசம்.
காவல் நிலையங்களில் எது நடந்தாலும் நீதிமன்றத்திற்கு தெரியாமல் நடக்கிறது. சிஎஸ்ஐஆர் நடைமுறையை ஒழிக்க நீதிமன்றம் முன்வர வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரியல் எஸ்டேட்டில் இறங்கி விட்டனர். அவர்களை எதிர்ப்பவர்களை மிரட்ட ஆரம்பிக்கப்பட்டதே தனிப்படை.
கோயிலின் உள்ளே கொலை:
சிஎஸ்ஐஆர் , நடைமுறையை ஒழித்தால்தான் இத்தகையை சம்பவங்கள் ஒழியும். கோயிலின் உள்ளே கொலை நடக்கிறது. அறநிலையத்துறையினர் எங்கே சென்றனர்?
இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.
லாக்கப் மரணங்கள்:
ஐஜியாக காவல்துறையில் பொறுப்பு வகித்த பொன்.மாணிக்கவேல் பொருளாதார குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர். சுமார் 25 ஆண்டுகள் காவல்துறையில் அனுபவம் கொண்ட ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரியே போலீசாரின் இந்த அணுகுமுறை மோசம் என்றும், தனிப்படைகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்டது என்றும் பேசியிருப்பது மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் உண்டாக்கியுள்ளது.
மக்கள் அதிர்ச்சி:
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என இதுவரை நடந்த ஆட்சிகளில் ஏராளமான லாக்கப் மரணங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறியுள்ளது. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மட்டும் காவல் நிலையங்களிலும், காவல்துறை விசாரணையாலும் 25 மரணங்கள் அரங்கேறியிருப்பதாக வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காவல்துறையினருக்கு பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது திமுக ஆட்சியில் அஜித்குமாரின் மரணம் எப்படி தமிழ்நாட்டை உலுக்கியுள்ளதோ, அதேபோல கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் எனும் தந்தை, மகன் போலீசார் விசாரணையில் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. மேலும், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவமும் பலருக்கும் காவல்துறையினர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.





















