PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: தனிநபர்களின் அடையாள அட்டைகளாக கருதப்படும் ஆதார், பான் மற்றும் வாக்காளர் அட்டையிலிருந்து, இறந்தவர்கள் பெயரை நீக்குவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

PAN Aadhar Voter ID Update: தனிநபர்களின் அடையாள அட்டைகளாக கருதப்படும் ஆதார், பான் மற்றும் வாக்காளர் அட்டையிலிருந்து, இறந்தவர்கள் பெயரை நீக்குவது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்களுக்கான அடையாள அட்டைகள்:
குடும்ப உறுப்பினர்காளில் யாரேனும் எதிர்பாராத விதமாக இறந்துபோனால், அவர்களது பான் கார்ட், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற நடவடிக்கையை இந்தியர்கள் பெரும்பாலும் பின்பற்றுவதே இல்லை. இந்த தனிநபர் அடையாள அட்டைகள் தானாகவே ரத்து செய்யப்படுவதில்லை அல்லது செயலிழக்கப்படுவதில்லை என்பதை பலர் அறிவதும் இல்லை. ஒருவரது இறப்பிற்குப் பிறகும் அவரது அடையாள அட்டைகள் செயலில் இருந்தால், அதன் மூலம் மோசடிகள் மற்றும் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளுக்கு கூட தவறாகப் பயன்படுத்தப்படலாம். எனவே, ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவரது அடையாள அட்டைகள் முறைப்படி ரத்து செய்யப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
பான் கார்டை ஏன் ரத்து செய்ய வேண்டும்?
பான் கார்ட்களை பயன்படுத்தி போலி வங்கிக் கணக்குகள் தொடங்கலாம், கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம், வரி மோசடி செய்யலாம் மற்றும் அடையாள திருட்டிலும் ஈடுபடலாம். எனவே உங்கள் வீட்டு நபரின் அடையாளத்தை பயன்படுத்தி நிதி மோசடிகள் நடைபெறுவதை தடுக்க பான் கார்டை ரத்து செய்ய வேண்டியது அவசியமாகும்.
பான் கார்டை ரத்து செய்வது எப்படி?
படி 1: முதலில் PAN அட்டையின் நகல், இறப்புச் சான்றிதழ் (மருத்துவமனை அல்லது உள்ளூர் அதிகாரியால் வழங்கப்பட்டது), PAN ரத்து செய்யக் கேட்கும் கோரிக்கைக் கடிதம், நீங்கள் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கான சான்றாகச் செயல்படும் உங்கள் சொந்த PAN அட்டை நகல் (ஆதார், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் அல்லது உயில் போன்றவை) ஆகியவற்றை சேகரிக்க வேண்டும்
படி 2: இறந்தவரின் முழுப் பெயர் மற்றும் PAN எண்ணை உள்ளடக்கிய ஒரு கோரிக்கை கடிதத்தை எழுத வேண்டும். அதில் இறந்த தேதி, ரத்து செய்வதற்கான காரணம், உங்கள் விவரங்கள் மற்றும் இறந்தவருடனான உங்கள் உறவு தொடர்பான விவரங்களை குறிப்பிட வேண்டும்.
படி 3: கடிதம் மற்றும் ஆவணங்களை வருமான வரித் துறையின் உள்ளூர் மதிப்பீட்டு அதிகாரியிடம் (AO) நேரில் சமர்ப்பிக்க வேண்டும், அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பலாம். வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலில் உள்ள "உங்கள் AO ஐ அறிந்து கொள்ளுங்கள்" கருவியைப் பயன்படுத்தி உங்கள் AO யார் என்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
மாற்று வழி: NSDL வலைத்தளத்தில் கிடைக்கும் படிவம் 49A ஐப் பயன்படுத்தி, PAN ஐ ரத்து செய்வதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் PAN திருத்த விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். அனைத்து ஆவணங்களுடனும் உங்கள் அருகிலுள்ள NSDL PAN சேவை மையத்தில் அதைச் சமர்ப்பிக்கவும்.
வாக்காளர் அடையாள அட்டையை ரத்து செய்வது எப்படி?
வாக்காளர் பதிவு விதிகள், 1960 இன் கீழ் படிவம் 7 ஐ நிரப்புவதன் மூலம் இறந்த நபரின் வாக்காளர் அடையாள அட்டையை ரத்து செய்ய முடியும். தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டலை (NVSP) பார்வையிடுவதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை ரத்து செய்யலாம். படிவம் 7 ஐ பதிவிறக்கம் செய்து, விவரங்களை நிரப்பி, இறப்புச் சான்றிதழை இணைத்து, ஆன்லைனில் அல்லது உங்கள் உள்ளூர் தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பித்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
ஆதார் அட்டையை ரத்து செய்வது எப்படி?
PAN அட்டையை போன்று, இறந்த நபரின் ஆதார் அட்டையை ஆன்லைனில் தற்போது ரத்து செய்ய முடியாத நிலை இருந்தது. காரணம் UIDAI (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) இன்னும் அதன் அமைப்பை மாநில அளவிலான இறப்பு பதிவுகளுடன் இணைக்கவில்லை எனபதே ஆகும்.
இந்நிலையில் தான் இறந்தவர்களின் பெயரை ஆதாரில் இருந்து நீக்க குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இறப்புச் சான்றிதழை முதன்மை ஆதாரமாகக் கொண்டு குடும்பத்தினரே பெயர் நீக்க முடியும் எனவும், வாரிசு சான்று, சொத்துப் பதிவு ஆகியவற்றுக்கு ஆதார் நீக்கச் சான்று கட்டாயமாக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக இறந்தவரின் பயோமெட்ரிக் தரவுகளையும் குடும்பத்தினரால் பாதுகாக்க முடியும். அதன்படி, இறந்த நபரின் கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்களை அடையாள மோசடிக்காக யாரும் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. இதைச் செய்ய அதிகாரப்பூர்வ UIDAI வலைத்தளத்தை அணுகவும்.






















