Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை காலை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதையடுத்து, லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்பவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.
நாளை திருச்செந்தூர் கும்பாபிஷேகம்:
கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே அறுபடை வீடான இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். திருச்செந்தூர் முருகன் கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
10 லட்சம் பக்தர்கள்:
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஒட்டுமொத்த திருச்செந்தூரும் களைகட்டியுள்ளது. கோயில் வண்ண தோரணங்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு படையெடுத்து வருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த கும்பாபிஷேக விழாவிற்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடமுழுக்கு விழா நாளை காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 25 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். 27 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக 20 வாகன நிறுத்தங்கள் தயார் நிலையில் உள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:

குடமுழுக்கு பணிகளை கண்காணிப்பதற்காக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரம் அடி சதுர பரப்பளவில் யாகசாலை சிறப்பு பூஜைகள் மும்முரமாக நடந்து வருகிறது. குடமுழுக்கை முன்னிட்டு ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட உள்ளது. குடமுழுக்கு புனித நீர் அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும் விதமாக ட்ரோன்கள் மூலமாக புனிதநீர் பக்தர்கள் மீது தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள், ரயில்கள்:
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக ரூபாய் 10.57 கோடியில் கட்டப்பட்ட 52 அறைகள் கொண்ட நவீன தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். தமிழக அரசு சார்பில் கடந்த 4ம் தேதி முதல் திருச்செந்தூருக்கு சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம் என தமிழ்நாடு முழுவதும் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை காட்டிலும் 400 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் வசதிக்காக ஏற்பாடு:
பயணிகளின் வசதிக்காக கூடுதல் கழிவறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காணும் விதமாக பிரம்மாண்ட எல்இடி திரையரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்காக பிரசாதமும், அன்னதானமும் வழங்கவும் திருக்கோயில் நிர்வாகம் சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் அனுமதி பெற்று பக்தர்கள் அன்னதானம் வழங்கலாம் என்றும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
மேலும், கடலில் பக்தர்கள் நீராடுவார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பிற்காக நீச்சல் தெரிந்த வீரர்கள், போலீசார் கடலோரத்தில் தயார் நிலையில் உள்ளனர். இந்த குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், எம்.எல்.ஏ.க்களும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் மட்டுமின்றி நாளை வல்லக்கோட்டை முருகன் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதனால், மற்ற அறுபடை வீடுகளிலும், உலகெங்கிலும் உள்ள முருகன் கோயிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகள் நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















