Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்கப் டெத் விவகாரம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் இதேபோல் மற்றொரு சம்பவம் தேனியில் நடைபெற்றுள்ளது. ஒரு இளைஞரை காவலர்கள் கும்பலாக சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியில் இருப்பவர் அபுதல்ஹா. சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு மற்றும் ஏராளமான காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு இளைஞர் ஒருவரை அழைத்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் அபுதுல்ஹா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு உள்ளிட்ட காவல்துறையினர் காலால் எட்டி உதைத்தும் லத்தியால் தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது .
ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் தனிப்படை காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் ஏராளமான காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து இன்னும் பல காவல் துறையினர் மீது விசாரணையில் இருந்து வரும் நிலையில் , தற்போது இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காவல்துறையினரின் கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் குற்றம் செய்த காவல்துறையினர் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மேலும் தாக்கப்பட்ட இளைஞர் குறித்து விசாரணை செய்து தமிழக அரசு தாமாக முன்வந்து பாதிக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞர் என்ன வழக்கிற்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார் அன்றைய தினத்தில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்கள் குறித்த தகவல்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் .





















