லாரி மீது கார் மோதியதில் சென்னையை சேர்ந்த இருவர் உயிரிழப்பு - தூக்க கலக்கத்தால் நேர்ந்த சோகம்
முன்னாள் சென்ற லாரியின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச்சாலையில் உள்ள நத்தமேடு என்ற இடத்தில் முன்னாள் சென்ற லாரியின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த நிலையில் காரை ஓட்டி வந்த இன்னொரு மகன் லேசான காயங்களுடன் திண்டிவனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை கிண்டி சேர்ந்தவர் இரத்தினசாமி(77). சென்னை லைட் ஹவுஸில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர். இரத்தினசாமி அவரது மகன்களான மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வேல்முருகன்(45), மற்றும் சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் இன்னொரு மகன் ரமேஷ்(40) ஆகிய மூன்று பேரும் சேலத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் இருந்து தனது தந்தை சிகிச்சைக்காக சென்றுவிட்டு மீண்டும் காரில் சென்னை திரும்பிக்கொண்டு இருந்தனர். காரை வேல்முருகன் ஒட்டிச்சென்றார்.
லாரி மீது கார் மோதி விபத்து
கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நத்தமேடு பகுதியில் சென்றுக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது கார் மோதி கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ரத்தினசாமி மற்றும் அவரது மகன் ரமேஷ் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த வேல்முருகன் படும் காயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூக்க கலக்கத்தால் நேர்ந்த சோகம்
காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தூக்க கலக்கத்தில் முன்னாள் சென்ற லாரி மீது காரானது மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் இவர்கள் இரண்டு பேரின் உடல்நிலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து திண்டிவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.