Blood donation: ஒரு சில தடவை மட்டும் அல்ல... 100 முறை இரத்த தானம் செய்த நபர்!
"அப்போது எனக்கு 23 வயது. அந்த சமயத்தில் தான் நான் முதல் முறையாக இரத்த தானம் செய்தேன். வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இரத்த தானம் செய்வேன். கொரோனா காலத்தில் கூட இரத்த தானம் செய்தேன்."
இரத்ததானம் (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்பட வேண்டி தானமாக வழங்குவது ஆகும்.
ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் இருக்குமாம். இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200 முதல் 300 மி.லி. இரத்தம் வரை தானம் செய்யலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம் என்கிறது மருத்துவ உலகம். இன்றைய வேகமான காலகட்டத்தில் பிறரின் நலனில் அக்கறை கொண்டு இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தே வருகிறது.
எனினும், சிலர் கல்லூரி காலத்திலும், சிலர் எப்போதாவது ஒரு முறையும் தான் இரத்த தானம் செய்திருப்பர். பின்னர் பொருள் ஈட்டும் வேகத்தில் இதையெல்லாம் மறந்து போயிருப்பர். ஆனால், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ரவிக்குமார் தனது 23ஆவது வயதில் இருந்து மறவாமல் இரத்த தானம் செய்து வருகிறார்.
தற்போது 61 வயதை எட்டியுள்ள அவர், 100 ஆவது முறையாக சமீபத்தில் இரத்த தானம் செய்து சாதனை படைத்திருக்கிறார். சென்னையில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனை ஒன்றில் முதல் முறையாக தனது 23-வது வயதில் இரத்த தானம் செய்த அவர், 100-வது முறையாகவும் அதே மருத்துவமனையில் இரத்த தானம் செய்திருக்கிறார்.
இரத்த தானம் செய்வதில் சென்சுரி அடித்துள்ள ரவிக்குமாருக்கு அந்த மருத்துவமனை சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளது.
இதுகுறித்து ஏபிபி நாடு செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டேன். எனது உடன் பணிபுரிபவரின் மனைவிக்கு இரத்தம் தேவைப்பட்டது. இதையடுத்து எங்களது அலுவலகத்தில் இருந்து இரத்த தானம் செய்ய சென்றோம். அப்போது எனக்கு 23 வயது. அந்த சமயத்தில்தான் நான் எனது வாழ்க்கையில் முதல் முறையாக இரத்த தானம் செய்தேன்.
அப்போது என்னுடைய இரத்த வகை என்ன என்று கூட தெரியாது. பின்னர் 'பி பாசிட்டிவ்' குரூப் என தெரிந்துகொண்டேன். அப்போது முதல் தொடர்ந்து இரத்த தானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இரத்த தானம் செய்வேன். கொரோனா காலத்தில் கூட இரத்த தானம் செய்தேன்.
ஒரு முறை என்னை அரசு சாரா அமைப்பு ஒன்று சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது. அதில் கலந்து கொண்டபோதும் நான் இரத்த தானம் செய்தேன். சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் இரத்த தானம் செய்கிறாரே என்று அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
கம்மியான கார்ப்ஸ்.. அதிகமான ப்ரோட்டீன்.. தென் கொரிய மக்களின் உணவுமுறையில் இவ்ளோ மேஜிக்கா?
மற்றொரு மறக்க முடியாத நிகழ்வு, ஒரிஸா மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. அவருக்கு நான் செய்த இரத்த தானம் உதவியிருக்கிறது. அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் என்னைப் பற்றி மருத்துவமனை வாயிலாக கேட்டு அறிந்து கொண்டு இரத்த தானம் செய்ததற்கு நன்றி கூறினர். அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக மனதில் பதிந்து இருக்கிறது என்கிறார் ரவிக்குமார்.
இவர் மட்டுமல்ல, இவரது தந்தையும் 60 முறை இரத்த தானம் செய்திருக்கிறாராம். காலமாகிவிட்ட தனது தந்தை குறித்து ரவிக்குமார் நினைவு கூர்ந்தார்.
"எனது தந்தை ரங்கராஜன் 60 முறை இரத்த தானம் செய்திருக்கிறார். ஒரு முறை அவரிடம் இரத்த தானம் ஏன் செய்கிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர், சக மனிதர்களுக்கு பண உதவி செய்ய முடியவில்லை என்றாலும், பிற வகையிலாவது நாம் உதவி செய்ய வேண்டும்" என்று கூறினார். தந்தையின் அறிவுரையை இன்று வரை பின்பற்ற முயற்சி செய்து வருகிறேன்" என்கிறார் ரவிக்குமார்.
என்ன.... நாமும் இரத்த தானம் செய்யத் தொடங்கலாம் தானே!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )