Praggnanandhaa: என்னடா இது..! கார்ல்சனையே கதறவிட்ட குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா - பட்டம் போச்சா?
Praggnanandhaa D Gukesh: குரேஷியாவில் நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியில், உலக சாம்பியனான குகேஷை சக தமிழக வீரரான பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.

Praggnanandhaa D Gukesh: குரேஷியாவில் நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியில், ப்ளிட்ஸ் பிரிவில் குகேசை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.
குகேஷை வீழ்த்திய பிரக்ஞானந்தா:
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்த ரேபிட் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியனான குகேஷ், 14 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து தற்போது பிளிட்ஸ் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சக தமிழக வீரரான பிரக்ஞானந்தா உடனான போட்டியில் தோல்வியுற்றதன் மூலம், போட்டியின் ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் பின் தள்ளப்பட்டுள்ளார். ரேபிட் பிரிவின் சுற்றின் முடிவில் மற்ற வீரர்களை காட்டிலும் 3 புள்ளிகள் முன்னிலையில் இருந்த குகேஷ், தற்போது வெறும் 15.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
குகேஷ் கண்ட 6 தோல்விகள்:
பிளிட்ஸ் பிரிவில் முதல் ஐந்து ஆட்டங்களிலும் தோல்வியுற்ற் குகேஷ், ஆறாவது ஆட்டத்தை டிரா செய்து சற்றே மீண்டார். ஆனால், ஏழாவது ஆட்டத்தில் மீண்டும் தோல்வியுற, எட்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று நம்பிக்கை தந்தார். ஆனால் இறுதி லீக் சுற்றில் பிரக்ஞானந்தாவிடம் குகேஷ் தோல்வியுற்று, கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பை குகேஷ் வெகுவாக இழந்துள்ளார். முன்னதாக உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை அடுத்தடுத்து வீழ்த்திய குகேஷையே, பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தினார்.
கார்ல்சன் முன்னிலை:
இதனிடையே, ரேபிட் பிரிவில் 10 புள்ளிகளை மட்டுமே பெற்ற கார்லசன், பிளிட்ஸ் பிரிவில் தனது 9 ஆட்டங்களின் முடிவில் 7.5 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த போட்டியின் கடந்த எடிஷனில், கடைசி 9 ஆட்டங்களிலும் அடுத்தடுத்து வென்று சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. ரேபிட் பிரிவில் 6 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்திய, செஸ் விளையாட்டின் மிக வேகமான போட்டியான பிளிட்ஸில் முதல் நாளிலேயே 6 போட்டியில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
குகேஷிற்கு வாய்ப்பு இருக்கா?
இறுதி நாளில் யார் முன்னிலை வகிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைய சூழலில் கார்ல்சன் 17.5 புள்ளிகளையும், போலந்தின் டுடா ஜான்-க்ரிஸ்டோப் 16 புள்ளிகளும், குகேஷ் 15.5 புள்ளிகளையும் பெற்று முதல் 3 இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் 13.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 5வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிளிட்ஸ் பிரிவில் இன்னும் ஒன்பது சுற்றுகள் மீதமுள்ள நிலையில், மீதமுள்ள ஆட்டங்களில் ஆறு புள்ளிகளைப் பெற்று கார்ல்சன் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்த குகேஷ் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்று அசத்துவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.





















