Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Neeraj Chopra Classic 2025: இந்தியாவில் நடைபெற்ற முதல் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

Neeraj Chopra Classic 2025: இந்தியாவில் நடைபெற்ற முதல் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி, ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ராவின் பெயரிலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நீரஜ் சோப்ரா சம்பவம்:
ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான நீரஜ் சோப்ரா, மீண்டும் ஒரு சாம்பியன் பட்டம் வென்று சர்வதேச போட்டிகளில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளார். இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்ற நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025 என்ற போட்டியில், 86.18 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெற்றியை வசப்படுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கந்தீரவா மைதானத்தில் நேற்று இந்த போட்டி நடைபெற்றது. அவரது பெயரில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றை பதிவு செய்த நீரஜ் சோப்ரா, ரசிகர்களை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததோடு, ஒரு வரலாற்று நாயகனாகவும் உருவெடுத்துள்ளார்.
NEERAJ CHOPRA WINS NC CLASSIC 2025! 🏆
— The Khel India (@TheKhelIndia) July 5, 2025
- The Winning Throw of 86.18m for G.O.A.T 🐐
pic.twitter.com/nPaJhHuJmk
முதல் மூன்று இடங்கள்:
இந்தியாவில் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இதில் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கென்யாவைச் சேர்ந்த ஜுலியஸ் ஏகோ இரண்டாவது இடம் பிடிக்க, இலங்கையை சேர்ந்த ரமேஷ் பதிரேஜ் மூன்றாவது இடத்தை பிடித்தார். இரண்டு முறை ஒலிம்பிக் பட்டம் வென்ற நீரஜ் சோப்ர,அ உள்நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் சர்வதேச அளவிலான பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த தருணத்தை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக ஆர்பரித்து கொண்டாடினர்.
- நீரஜ் சோப்ரா - 86.18 மீட்டர்
- ஜுலியஸ் ஏகோ - 84.51 மீட்டர்
- ரமேஷ் பதிரேஜ் - 84.34 மீட்டர்
அடையாளமாக மாறிப்போன நீரஜ் சோப்ரா:
தடகள போட்டி பிரிவில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை, டோக்கியோ ஒலிம்பிக் மூலம் நீரஜ் சோப்ரா பெற்றார். தொடர்ந்து சர்வதேச போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வெள்ளி வென்று அசத்தினார். இந்நிலையில் தான், இந்திய விளையாட்டு கட்டமைப்பின் வரலாற்றின் முக்கிய புள்ளியாக மாற உள்ள, நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025 போட்டியில் அவர் பெற்றுள்ள வெற்றி அடையாளமாக மாறியுள்ளது. இது எதிர்கால தலைமுறைக்கு பெரும் உத்வேகமாக மாறக்கூடும். ஏற்கனவே, தடகள பிரிவில் ஒரு லெஜண்ட் அந்தஸ்தை நீரஜ் சோப்ரா பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, நீரஜ் சோப்ராவிற்கு தங்கப் பதக்கத்தை வழங்கினார்.
நான்காவது இடத்தில் சச்சின்:
நீரஜ் சோப்ரா கவனத்தை ஈர்த்த அதே வேளையில், சக இந்திய போட்டியாளரான சச்சின் யாதவ் 82.33 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார். மற்றொரு இந்திய தடகள வீரர் யஷ்வீர் சிங் 79.65 மீட்டர் தூரம் எறிந்து எட்டாவது இடத்தைப் பிடித்தார். JSW ஸ்போர்ட்ஸ், இந்திய தடகள கூட்டமைப்பு மற்றும் உலக தடகளம் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் போட்டியில், உலகம் முழுவதிலுமிருந்து சில சிறந்த வீரர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் வெள்ளிப் பதக்கம் வென்ற கிஷோர் ஜெனா, காயம் காரணமாக போட்டியைத் தவறவிட்டார்.





















