IND vs ENG 2nd Test: ஒரே டெஸ்டில் 1000 ரன்கள்.. புது வரலாறு படைத்த இந்தியா! இனிமே நாங்கதான்
IND vs ENG 2nd Test: இங்கிலாந்திற்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1000 ரன்களை குவித்து புது வரலாறு படைத்துள்ளது.

IND vs ENG 2nd Test: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், புஜாரா, ரஹானே என எந்தவொரு சீனியர்களும் இல்லாமல் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா என்ன செய்யப்போகிறது? என்றே அனைவரும் கருதினர்.
ஒரே டெஸ்டில் 1000 ரன்கள்:
ஆனால், முதல் டெஸ்டிலே பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி இந்த போட்டியிலும் பேட்டிங்கில் கலக்கியது. முதல் இன்னிங்சில் சுப்மன்கில் சதத்தின் உதவியால் 587 ரன்களை குவித்த இந்தியா இரண்டாவது இன்னிங்சிலும் 427 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1014 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய இந்த 93 ஆண்டுகால வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் 1000 ரன்களை தொட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2004ம் ஆண்டு சிட்னியில் இந்தியா 916 ரன்கள் எடுத்ததே அதிக ரன்களாக இருந்தது.
மொத்தத்தில் 6வது முறை:

ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் ஒரு அணி 1000 ரன்களை எடுப்பது இது 6வது முறையாகும். இதற்கு முன்பு இந்த வரலாற்றை இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் மட்டுமே படைத்துள்ளன. ஆஸ்திரேலியா மட்டும் 2 முறை இந்த சாதனையை படைத்துள்ளது.
1. இங்கிலாந்து - 1121 ரன்கள் ( வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக - 1930ம் ஆண்டு)
2. பாகிஸ்தான் - 1078 ரன்கள்( இந்தியாவிற்கு எதிராக, 2006ம் ஆண்டு)
3. ஆஸ்திரேலியா - 1028 ரன்கள் ( இங்கிலாந்திற்கு எதிராக, 1934ம் ஆண்டு)
4. இந்தியா - 1014 ரன்கள்( இங்கிலாந்திற்கு எதிராக, 2025ம் ஆண்டு)
5. ஆஸ்திரேலியா - 1013 ரன்கள் ( வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக, 1969ம் ஆண்டு)
6. தென்னாப்பிரிக்கா - 1011 ரன்கள் ( இங்கிலாந்திற்கு எதிரா, 1939)
இங்கிலாந்து மோசமான சாதனை:
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டுமே 3 முறை 1000 ரன்கள் ஒரே டெஸ்ட் போட்டியில் விளாசப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இந்த சாதனைகளைப் படைத்துள்ளது.
21ம் நூற்றாண்டில் இந்த சாதனையைப் படைத்த இரண்டே அணிகள் இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டுமே ஆகும். ஒரே டெஸ்ட் போட்டியில் 1000 ரன்களை குவித்த இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், கங்குலி, லட்சுமணன், ராகுல் டிராவிட், விராட் கோலி, ரஹானே புஜாரா, ரோகித் சர்மா ஆகிய ஜாம்பவான்கள் இருந்தபோது படைக்க முடியாத சாதனையை சுப்மன்கில் தலைமையிலான இளம் இந்திய அணி படைத்துள்ளது.




















