இந்தியாவிலேயே முதல் முறை! கடல்சார் பல்கலைக்கழகத்தில் கிடைத்த இடம்! சாதித்த திருவண்ணாமலை அரசு பள்ளி மாணவி!
Tiruvannamalai: "திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, பழங்குடி மாணவியான கவிதா, இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் தேர்வாகி அசத்தியுள்ளார்"

அரசு பள்ளியில் படித்த கவிதா என்ற பழங்குடியின மாணவி, இந்தியாவிலேயே முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க தேர்வாகியுள்ளார்.
பின்தங்கிய திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கிராமப் பகுதிகள் அதிக அளவு நிறைந்த மாவட்டங்களில், ஒன்றாக இருந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டியலின மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். அதேபோன்று பழங்குடியின மக்களும் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை பெரும்பாலான குடும்பங்கள் விவசாயத்தையோ அல்லது தினக்கூலி வேலைகளையோ நம்பி இருப்பதால், குழந்தைகளின் கல்விக்குச் செலவிடும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
இதனால் திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை கல்வி குறித்த விழிப்புணர்வும், குறைந்த அளவில் இருப்பதே இதற்கான காரணங்கள் என கூறப்படுகிறது. இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இன மாணவி ஒருவர், இந்திய அளவில் சாதித்துள்ளார்.
தமிழக அரசின் திட்டங்கள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சமீப காலமாக புதுமைப்பெண், நான் முதல்வன் மற்றும் தமிழ் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான் முதல்வன் திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்படுவதால், தேசிய அளவில் உயர்கல்வி செயற்கையிலும், இடம் பிடித்து மாணவ மாணவிகள் அசத்தி வருகின்றனர்.
பழங்குடியின மாணவி கவிதா
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே உள்ள உடையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா-பூங்கொடி தம்பதியினர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளன. ராஜா பூங்கொடி தம்பதியின் மூன்றாவது பிள்ளை கவிதா. ராஜா மற்றும் பூங்கொடி இருவரும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதலில் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து வந்துள்ளனர்.
கவிதா, ஏற்காடு பகுதியில் உள்ள ஏகலைவா அரசு உண்டு உறைவிட பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பிறகு புளியம்பட்டி பகுதியில் உள்ள ஏகலைவா அரசு உண்டு உறைவிட பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு கவிதா படித்துக் கொண்டிருந்தபோதே அவரது தந்தை உயிரிழந்துள்ளார்.
குழந்தைகள் படிப்புக்காக தன்னையே தியாகம் செய்த தாய்
ராஜா உயிரிழந்ததால் குடும்பம் வறுமையில் சிக்கி வந்துள்ளது. குழந்தைகளுக்கு படிப்பை கொடுத்து விட வேண்டும், அதற்காக தாய் பூங்கொடி வெளிநாடுகளுக்கு சென்று, வீட்டு வேலை செய்து குழந்தைகளை காப்பாற்ற முடிவெடுத்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளை பாட்டி அரவணைப்பில் விட்டுவிட்டு, வெளிநாடு சென்று வீட்டு வேலை பார்த்துக்கொண்டே குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.
தாயின் கஷ்டத்தை உணர்ந்த கவிதா கல்வியில் முழு கவனத்தை செலுத்தி வந்துள்ளார். ஆசிரியர்களும் மாணவிக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கி வந்துள்ளனர். ஆசிரியர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கும் தயார் படுத்திக் கொண்டு வந்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 385 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து ஆசிரியர்களின் உதவியுடன், செங்கல்பட்டு உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமுக்கு அனுப்பி வைத்து அவரை படிக்க வைத்துள்ளனர்.
இந்தியாவிலேயே முதல்முறையாக சாதனை
இதனைத் தொடர்ந்து இந்திய கடல்சார் கல்வியை தேர்ந்தெடுத்து 6 மாதம் பயிற்சி பெற்றுள்ளார். இதற்காக போட்டித் தேர்வு எழுதிய கவிதா தேசிய அளவில் தர வரிசை பட்டியலில் 18,806-வது ரேங்க் பிடித்தார். இதனைத் தொடர்ந்து கவிதாவிற்கு இந்திய கடல்சார்ப பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள கடல் சார்ப பல்கலைக்கழகத்தில், பி.டெக் கடல்சார் கட்டிடக்கலை மற்றும் கட்டுமானம் குறித்த படிப்பினை தேர்வு செய்துள்ளார்.
நாட்டிலேயே முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் இணையும் முதல் பழங்குடியின மாணவி என்ற சாதனையை கவிதா பெற்று அசத்தியுள்ளார். மாணவியின் கவிதாவின் அனைத்து மேல்படிப்பு செலவுகளையும் ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக பார்க்கப்படும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி, இந்தியாவில் முதல் பழங்குடியின மாணவியாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி கூறுவது என்ன?
இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் பேசிய மாணவி கவிதா: தனக்கு ஆசிரியர்கள் மிகுந்த உதவியாக இருந்தார்கள். நான் இந்தியாவில் முதன்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு படிப்பு செலவை அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து என் அம்மாவிடம் தெரிவித்த போது அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரியர்கள் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.





















