Virat Kohli: சுப்மன்கில்.. நீ அத்தனைக்கும் தகுதியானவன்.. வளரும் கோலியை பாராட்டிய ரியல் கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிராக அசத்தலாக பேட்டிங் செய்து வரும் கேப்டன் சுப்மன்கில்லை முன்னாள் கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சுப்மன்கில்லை பாராட்டிய விராட் கோலி:
இந்த நிலையில், விராட் கோலி இல்லாத சூழலில் இங்கிலாந்தில் இளம் கேப்டன் சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது. இந்திய அணியின் பேட்டிங் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, கேப்டன் சுப்மன்கில் இதுவரை ஆடிய 4 இன்னிங்சில் 2 சதம், 1 இரட்டை சதத்தை விளாசி அசத்தியுள்ளார்.

அடுத்த கோலி என்று பலராலும் புகழப்படும் சுப்மன்கில்லிற்கு விராட் கோலியே பாராட்டு தெரிவித்துள்ளார். விராட் கோலி சுப்மன்கில்லை பாராட்டி தனது இன்ஸடாகிராம் பக்கத்தில், நன்றாக விளையாடினாய் நட்சத்திர இளைஞனே. வரலாற்றை மாற்றி எழுதியுள்ளாய். நீ அனைத்திற்கும் தகுதியானவன் என்று புகழாரம் சூடியுள்ளார். இந்திய அணிக்கு டெஸ்ட் கேப்டனாக இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசியவர்கள் பட்டியலில் கவாஸ்கர், விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் சுப்மன்கில்லும் இடம்பெற்றுள்ளார்.
கோலியாக மாறும் சுப்மன்கில்:
கேப்டனாக பொறுப்பேற்ற பிறகுதான் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமே விளாசினார். அதேபோல, சுப்மன்கில்லும் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகே டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதத்தை விளாசியுள்ளார். 25 வயதான சுப்மன்கில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி வரும் 4வது வரிசை என்பது சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆடிய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை எதிர்காலத்திற்கும் வழிநடத்தும் வகையில் சுப்மன்கில்லை இந்திய அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது. தற்போது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும், டி20 போட்டிகளில் துணை கேப்டனாகவும் ஆடி வரும் சுப்மன்கில் 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் முழுநேர கேப்டனாக உருவெடுப்பார் என்றே கருதப்படுகிறது.
ஏனென்றால், தற்போது வரை இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக ரோகித் சர்மாவே உள்ளார். ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வரை ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் ஆடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கால இந்திய அணி:
டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வடிவத்திலான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சுப்மன்கில் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 அரைசதம், 8 சதங்கள் மற்றும் 1 இரட்டை சதத்துடன் 2 ஆயிரத்து 478 ரன்களும், 55 ஒருநாள் போட்டிகளில் ஆடி 15 அரைசதம், 8 சதங்கள் மற்றும் 1 இரட்டைசதமும் விளாசியுள்ளார். 21 டி20 போட்டிகளில் ஆடி 3 அரைசதம், 1 சதத்துடன் 578 ரன்களும் எடுத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை கோலி துரத்திச் சென்று முறியடித்தது போல, சுப்மன்கில் விராட் கோலியின் பல சாதனைகளை துரத்திச் சென்று முறியடித்து வருகிறார். அடுத்த தலைமுறைக்கான இந்திய அணியின் தூணாக சுப்மன்கில் மாறியுள்ளார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

விராட் கோலி இங்கிலாந்திற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு முழு உத்வேகத்தில் இருந்த சூழலில், அணி நிர்வாகம் செய்த உள்ளடி வேலைகள் காரணமாகவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்தவர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.



















