சொல்லாததையும் செய்த டிஎன்பிஎஸ்சி; ஓராண்டில் 17,702 பேருக்கு அரசுப் பணி- கூடுதலாக 2,500 காலியிடங்களை நிரப்பத் திட்டம்!
டிஎன்பிஎஸ்சி பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 17,702 இளைஞர்களை தெரிவு செய்துள்ளது.

ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை 17,702 இளைஞர்கள் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று கூறி உள்ளதாவது:
’’அரசுப் பணியை எதிர்நோக்கி இருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 17,595 காலிப் பணியிடங்கள் ஜனவரி 2026-க்குள்நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு ஜூன் 2024-ல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தது.
தேர்வர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவுப் பணிகளை துரிதப்படுத்தி, ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 17,702 இளைஞர்களை தெரிவு செய்துள்ளது.
7 மாதங்களுக்கு முன்பாகவே இலக்கை எட்டிய டிஎன்பிஎஸ்சி
அதாவது, தமிழ்நாடு அரசு ஜனவரி 2026 வரை நிர்ணயித்த இலக்கை, தேர்வாணையம் 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது.
2500+ காலிப் பணியிடங்கள்
மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கூடுதலாக 2500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப தெரிவுப் பணிகள் நடைபெற்று வருகிறது’’
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இதில் தலைவர் பணியிடம் காலியாக, நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் காலிப் பணியிடங்கள் முறையாக நிரப்பப்படுவதில்லை என்று குற்றசாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன.
ஆகஸ்ட் மாதம் டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்
இதற்கிடையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகு துரித கதியில் தேர்வு அறிவிப்புகள், ஆட்சேர்ப்பு அறிவிக்கை, தேர்வு முடிவுகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.






















