IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
IND vs ENG 2nd Test: இங்கிலாந்து அணிக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

IND vs ENG 2nd Test: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 587 ரன்களை இந்திய அணி குவித்த நிலையில், இங்கிலாந்து 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
608 ரன்கள் டார்கெட்:
இதையடுத்து, 2வது இன்னிங்சில் சுப்மன்கில்லின் அருமையான சதத்தால் இந்தியா 427 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதனால், இந்தியா இங்கிலாந்திற்கு 608 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதே மைதானத்தில் கடைசியாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போது 378 ரன்களை எட்டி இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தியது.

ஒரே நாளில் 536 ரன்கள் டார்கெட்:
ஆனால், 608 ரன்கள் என்ற இலக்கு மிகப்பெரிய இலக்காகும். நேற்றே இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி கிராவ்லி, டக்கெட் மற்றும் முக்கிய வீரர் ஜோ ரூட் ஆகியோரது விக்கெட்டை இழந்தது. 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து வெற்றிக்கு 536 ரன்கள் தேவைப்படுகிறது.

எட்ஜ்பாஸ்டன் மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தாலும் ஒரே நாளில் 536 ரன்கள் எடுப்பது என்பது அசாத்தியமான ஒன்றாகும். அந்த அணியினர் கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளது. இதனால், போட்டியை டிரா செய்யவே இங்கிலாந்து பெரிதும் முயற்சிப்பார்கள். ஏனென்றால், களத்தில் உள்ள ஒல்லி போப் - ஹாரி ப்ரூக் தவிர கேப்டன் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் மட்டுமே பேட்ஸ்மேன்கள். கிறிஸ் வோக்ஸ் ஆல்ரவுண்டர் ஆவார். இந்த 5 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டால் இங்கிலாந்தின் தோல்வி உறுதியாகும்.
58 ஆண்டு கால சோகம் முடியுமா?
இந்திய அணியைப் பொறுத்தவரை வேகத்தில் ஆகாஷ் தீப், முகமது சிராஜ் மிரட்டி வருகின்றனர். பிரசித் கிருஷ்ணாவும் கடைசி நாளான இன்று ஒத்துழைக்க வேண்டியது மிக மிக அவசியம் ஆகும். இந்திய அணி இன்று எஞ்சிய 7 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 58 ஆண்டுகால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மேலும், பந்துவீச்சில் நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரும் மிரட்டினால் இந்திய அணி இங்கிலாந்திற்கு குடைச்சல் கொடுக்கலாம்.
தொடங்குமா புது வரலாறு?
1967ம் ஆண்டு முதல் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி வரும் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றது இல்லை. இந்த டெஸ்ட் போட்டியில் கண்முன் வெற்றி வாய்ப்பு மிக மிக பிரகாசமாக அமைந்திருப்பதால் இந்த வாய்ப்பை இந்திய அணி தவறவிடக்கூடாது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை 1-1 என்று சமன் செய்வதுடன், புது புத்துணர்ச்சியுடன் இனி வரும் போட்டிகளில் ஆடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.




















