ராஜன் வகையறா கதையில் குட்நைட் மணிகண்டன்?.. வெற்றிமாறன் ஓகே சொல்லிட்டாராம்.. அடுத்தடுத்து அப்டேட்
குடும்பஸ்தன் படத்தின் வெற்றிக்கு பிறகு மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் செய்தி வெளியானது.

வசனகர்த்தா, மிமிக்ரி ஆர்டிஸ்ட், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் மணிகண்டன். இளம் வயதிலேயே சினிமாவை பற்றிய அறிவு அவரிடம் கொட்டி கிடக்கிறது. ஒரு படத்தை ரசிகர்களாக பார்ப்பதும், விமர்சகராக இருந்து ரசிப்பதும் வேறு என்பதை அவரது பேட்டியை பார்த்தாலே தெரிந்துவிடும். நடிகர் கமலின் தீவிர ரசிகரான மணிகண்டன், கமல் செய்த அசாத்திய திறமைகளை கண்டு பண்போடு விளக்குவதையும் பார்வயைாளராக இருந்து ரசித்திருக்கிறோம். இந்நிலையில், அவர் நடிககும் புதிய படத்தின் அப்டேட் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.
குட்நைட் மணிகண்டன்
காதலும் கடந்து போகும் படங்களில் விஜய் சேதுபதியுடன் வரும் சின்ன பையனாக இருந்து பிறகு விக்ரம் வேதா படத்தில் காவலாளி என கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டார் மணிகண்டன். ஜெய்பீம் படத்தில் ராசக்கண்ணுவாக வாழ்ந்திருப்பார். இதைத்தொடர்ந்து ஷோலோ ஹீரோவாக குட்நைட் படத்தின் மூலம் தனது வெற்றியை தொடங்கினார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த லவ்வர், குடும்பஸ்தன் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. குடும்பஸ்தன் படத்தை பார்த்து நடிகர் கமல் வியந்து பாராட்டியிருந்தார். குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இருந்தது.
சிம்பு படத்தில் முக்கிய கதாப்பாத்திரம்
குடும்பஸ்தன் படத்தை தொடர்ந்து மணிகண்டன் சிம்பு நடிக்க இருக்கும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குகிறார். வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இப்படம் ராஜன் வகையறா என்றே பலரும் தெரிவிக்கின்றனர். முன்னதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் சமுத்திரக்கனி அளித்த பேட்டிகளில் வெற்றிமாறன் வடசென்னையை தூக்கி சாப்பிடும் அளவிற்கு கல்ட் படத்தின் கதையை வைத்திருக்கிறார். அது மட்டும் வெளியானால் வெற்றிமாறன் லெவலே வேற என்று கூறினார்கள். அந்தக் கதையில் தான் சிம்புவுடன் மணிகண்டன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் இயக்குநர் நெல்சனும் நடிப்பது போன்ற புகைப்படமும் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மக்கள் காவலன் பட அப்டேட்
சிம்பு படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சந்தோஷ்குமார் இயக்கும் மக்கள் காவலன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படம் சமூகத்தில் நடக்கும் சாதிய அவலங்களை எதிர்த்து போராடும் கதாநாயகனின் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கிறார். இப்படத்தின் அப்டேட் தான் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கும் மணிகண்டன் விஜய் சேதுபதியை வைத்து வெப் தொடரையும் இயக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து மணிகண்டனே இயக்கி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.





















