Doctors Issue : ’’போதிய மருத்துவர்கள் இல்ல..பெரிய தலைவலியா இருக்கு’’புலம்பும் அரசு மருத்துவர்
உத்திரமேரூர் அருகே ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதினான்கு மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஐந்து மருத்துவர் மட்டுமே வேலை செய்வதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாம்பதி ஊராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு மற்றும் சுகாதார ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் உத்திரமேரூர் ஏம்ஏல்ஏ சுந்தர் கலந்து கொண்டு செவிலியர் குடியிருப்பு மற்றும் சுகாதார ஆய்வகம் ஆகியவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனிடையே அங்கிருந்த மருத்துவர் கண்ணதாசன் அவர்களிடம் மருத்துவமனைகளில் மருத்துவர் இல்லாமல் நோயாளிகள் படும் சிரமம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து மருத்துவர் கூறுகையில் ;
உத்திரமேரூர் தாலுகாவில் சாலவாக்கம், குருமஞ்சேரி, படூர், களியாம்பூண்டி உள்ளிட்ட ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் பதினான்கு மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஐந்து மருத்துவர்கள் மட்டும் வேலை செய்து வருகிறோம்.
இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து மேலிடத்தில் தகவல் தெரிவித்து விட்டோம். செவிலியர்கள் பற்றாக்குறையும் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
அப்போது நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்க போகிறோம் என பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.