Kanchipuram Police | ”டேய் கைநீட்டி பேசுறியா” புகாரளித்த அதிமுக நிர்வாகி! விரட்டியடித்த POLICE
காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற அதிமுக நிர்வாகி மீது பணியில் இருந்த எஸ்.ஐ., ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளா நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி . இவர் அதிமுகவில் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த அம்மு என்கிற பெண் வண்டலூர் வாலாஜாபாத் நெடுஞ்சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அம்முவின் மகளை அதிமுக நிர்வாகி ரவி காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, காவல் நிலைய நுழைவாயிலில், வரவேற்பு பகுதியில் இருந்த எஸ்.ஐ., சிலம்பரசன் ரவியை அழைத்து புகார் தொடர்பாக விசாரித்துள்ளார். மேலும், ஏன் தன்னை சந்திக்காமல், காவல் ஆய்வாளரை சந்தித்தீர்கள் என கேட்டு, ரவியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அந்த சமயத்தில் , எஸ்.ஐ., சிலம்பரசன் ரவியை ஆபாசமாக பேசி, அவரது முகத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.
இந்த சம்பவத்தை புகார் அளிக்க உடன் சென்ற இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் தாக்குதலுக்கு ஆளான ரவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். மேலும் எஸ்.ஐ., தாக்கியது தொடர்பாக, அதிமுக நிர்வாகி ரவி ஒரகடம் காவல் நிலையத்தில், ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி., கீர்த்திவாசனை சந்தித்து புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.





















