EPS Vs DMK: “திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
டெல்டா மாவட்டங்கள் இனி திமுகவின் கோட்டை அல்ல, அந்த கோட்டை எல்லாம் தூள் தூளாக நொறுக்கப்பட்டுவிட்டதாக தஞ்சையில் பேசிய எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தஞ்சை ரயில் நிலையம் அருகேயுள்ள காந்திஜி சாலையில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது, டெல்டா மாவட்டங்கள் இனி திமுகவின் கோட்டை அல்ல என விமர்சித்துள்ளார்.
“உங்க கோட்டை எல்லாம தூள் தூளாக நொறுக்கப்பட்டுவிட்டது“
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “தஞ்சை மாநகரமே குலுங்குகிறது. இது எழுச்சிப் பயணமல்ல, வெற்றி விழா போல காட்சியளிக்கிறது“ என்று கூறினார். மேலும், “அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. ஆனால் முதல்வர், திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என எல்லோருமே ஏதோ நாடாளுமன்றத் தேர்தல் நடப்பது போன்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் தானே வருகிறது. இதற்கு ஏன் பாஜகவை விமர்சனம் செய்கிறார்கள்.? ஏனென்றால் அதிமுகவை விமர்சிப்பதற்கு எதுவுமே இல்லை“ எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
அதோடு, “டெல்டா மாவட்டத்தை திமுக கோட்டை என்கிறார் ஸ்டாலின். இங்கு தஞ்சை மாநகரில் வந்து மக்கள் எழுச்சியைப் பாருங்கள், டெல்டா அதிமுக கோட்டை என்பதை உணர்வீர்கள். மேட்டுப்பாளையத்தில் நான் எழுச்சிப் பயணத்தை தொடங்கியபோது, தஞ்சை வந்து பாருங்க, டெல்டா வந்து பாருங்க என்கிறார் ஸ்டாலின், எங்கள் கோட்டைக்குள் நுழைந்துபாருங்கள் என்றார், உங்க கோட்டை எல்லாம் இப்போது தூள் தூளாக நொறுக்கப்பட்டுவிட்டது“ எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
மேலும், “ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது தான் மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், விவசாயிகள் வைத்த கோரிகையை ஏற்று மத்திய அரசோடு தொடர்புகொண்டு, டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். இனி எந்தக் காலத்திலும் எந்த தொழிற்சாலையும் உங்கள் டெல்டாவுக்கு வராது, உங்கள் பூமி உங்களுக்கே சொந்தம். தில்லு திராணி இருந்தா இதற்கு பதில் சொல்லுங்கள் ஸ்டாலின்“ என சவால் விடுத்தார்.
“திருமா கட்சியை திமுக விழுங்கிவிடும்“
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக - பாஜக கூட்டணி எப்படி உருவாகலாம் என்று கேட்கிறார் ஸ்டாலின். என்ன தப்பு.. உங்களுக்கு ஏன் எரிகிறது..? எங்கள் கட்சி இது. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். இரண்டு கட்சிகளுக்கும் திமுகவை அகற்ற வேண்டும் என்பது தான் ஒரே நோக்கம். தினமும் விசிக தலைவர் பேட்டி கொடுக்கிறார், எடப்பாடி எனக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாகச் சொல்கிறார், நிறைய சீட் தருவதாகச் சொல்கிறார் என்றெல்லாம் சொல்கிறார். நாங்க எங்கே அப்படி சொன்னோம்..? எப்போது சொன்னோம்..? எங்களை வைத்து அடையாளம் தேடாதீர்கள். திருமா கட்சியை திமுக விழுங்கிவிடும் என்று கடுமையாக விமர்சித்தார்.





















