Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்
சொர்க்கவாசல் திறப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு முதலில் யார் திவ்ய பிரபந்தம் பாடுவது என்று வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் சண்டை போட்டுக்கொண்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.வெள்ளி தகடுகளால் ஆன கதவில் திறக்கப்பட்டு அஷ்டபுஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
இந்தநிலையில் சொர்க்கவாசல் திறப்பதற்கு முன்பு வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே யார் முதலில் திவ்ய பிரபந்தம் பாடுவது என்பது தொடர்பாக பிரச்சனையை ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதால், கோவில் நிர்வாகம் சார்பில் வடகலை பிரிவினரை திவ்ய பிரபந்தம் பாட அழைத்ததாக கூறப்படுகிறது.
கோவில் ஸ்தானிகராக தென்கலை பிரிவினர் இருந்து வருகின்றனர். நாங்களே இங்கு திவ்ய பிரபந்தம் பாடுவதில்லை. நீங்கள் பாடுவதாக இருந்தால், நாங்கள் பாடிவிட்ட பிறகு நீங்கள் பாடுங்கள் என தென்கலை பிரிவினர் தெரிவித்துள்ளனர்
தென்கலை வடகலை பிரிவினர் இடையே, கோவில் வளாகத்திலேயே தகராறு ஏற்பட்டது. வடகலை - தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் சமாதானம் ஆகாததால், இரு தரப்பையும் காவல்துறையினர் பாடல் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றினர். இந்த சம்பவம் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடையே முகசூலிப்பை ஏற்படுத்தியது.