![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
France Riots: 4 நாட்களாக பற்றி ஏரியும் பிரான்ஸ்... வீதிகளில் குதித்த மக்கள்.. என்னதான் நடக்கிறது? - ஓர் அலசல்...!
பிரான்ஸில் போலீசாருக்கு எதிராக கடந்த நான்கு நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அங்கு பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது.
![France Riots: 4 நாட்களாக பற்றி ஏரியும் பிரான்ஸ்... வீதிகளில் குதித்த மக்கள்.. என்னதான் நடக்கிறது? - ஓர் அலசல்...! France protests people for four days 17 years old shot dead by police France Riots: 4 நாட்களாக பற்றி ஏரியும் பிரான்ஸ்... வீதிகளில் குதித்த மக்கள்.. என்னதான் நடக்கிறது? - ஓர் அலசல்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/01/8091b135908ac9cdaa12a22918a025b91688212367943572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
France Riots : பிரான்ஸில் போலீசாருக்கு எதிராக கடந்த நான்கு நாட்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி மற்ற நாடுகளையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவன்
பிரான்ஸின் தலைநகரமான மேற்கு பாரீஸ் புறநகரப் பகுதியான நான்டெர்ரே என்ற பகுதியில் நஹெல் என்ற 17 வயது சிறுவன் காரில் சென்று கொண்டிருந்தார். பாரீஸில் வாடகைக்கு கார் எடுத்த அந்த 17 வயது சிறுவன் நான்டெர்ரே சாலையில் தனது மூன்று நண்பர்களுடன் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, காரை ஓட்டிச் சென்ற நஹெல் போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிகிறது.
இதனால் சாலையில் இருந்த போக்குவரத்து போலீஸார் காரை நிறுத்தி அவர்களிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது ஒரு நிமிடம் காரை நிறுத்திய நஹெல், உடனே புறப்பட்டார். அந்த நேரத்தில் போலீசார் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, 17 வயது சிறுவன் நஹெலை நோக்கி சுட்டனர். உள்ளூர் நேரப்படி இந்த சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை காலை 9.15 மணிக்கு நடந்தது.
இதனை அடுத்து, அதிகவேகமாக சென்ற கார், சாலையோராம் இருந்த தடுப்பில் மோதி நின்றது. இதில் 17 வயது சிறுவன் நஹெல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பதறத்தை கிளப்பியுள்ளது. இதனை அடுத்து, நஹெல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பற்றி ஏரியும் பிரான்ஸ்
இந்நிலையில், நஹெலின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த சிறுவனின் தாயார் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில், நான்டெர்ரெ நகரில் சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குவிந்தனர். கடந்த செவ்வாய்கிழமை நடந்த போராட்டங்கள் அங்கு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நான்டெர்ரே நகர் மட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களில் இந்த போராட்டம் பரவியது. போராட்டக்காரர்கள் பொது சொத்துகளை தீயிட்டு கொளுத்தியும், போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீது கல்வீசித் தாக்குதலும் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் மர்சேய் பகுதியில் இருந்த ஒரு துப்பாக்கி கடையை சூறையாடினர். பலரும் அங்கிருந்து துப்பாக்கிகளை திருடிச் சென்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பிரான்ஸின் அரசு கட்டிடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் ஏராளமான போலீசார் காயம் அடைந்துள்ளனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, இரவு நேரங்களில் போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐ.நா.கவலை
இந்நிலையில், பிரான்ஸ் கலவரம் குறித்து ஐ.நா.சபை கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "17 வயதான ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞர், பிரான்ஸ் காவல் துறையினரால் கொல்லப்பட்டது கவலையடைய வைத்துள்ளது. பிரான்ஸ் அரசு இனவெறி மற்றும் இனப்பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சனைகளை தீவிரமாக கையாள வேண்டும். இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் போலீஸ் உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
அதிபர் சொல்வது என்ன?
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், "சிறுவன் கொலையை பயன்படுத்திக் கொண்டு போராட்டக்காரர்கள் சூறையாடுகின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க சொல்ல வேண்டும். இது சம்பந்தமாக சமூக வலைதளத்தில் வெளியாகும் வீடியோக்கள் போராட்டத்தை தூண்டுவது போல் உள்ளன” என்றார்.
இதற்கிடையில், போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நஹெல் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. நான்டெர்ரே நகரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. நஹெல் இறுதிச்சடங்கின் வன்முறை சம்பங்கள் நிகழாமல் இருக்க உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)