Ponmudi Case HC Warning: “ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
பொன்முடியின் அவதூறு பேச்சு குறித்து தாமாக முன்வந்து விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம், வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றவா என கேட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிபதி என்ன கூறினார் தெரியுமா.?

பெண்கள் குறித்தும், சைவம் மற்றும் வைணவ சமயங்கள் குறித்த அவதூறு பேச்சு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பதிவான வழக்குகளை விசாரிக்க போலீசார் தயக்கம் காட்டினால், அந்த வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி கூறியது என்ன.?
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று நடந்த விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்யத் தயங்கினால், விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்படும் என அவர் எச்சரித்தார்.
மேலும், பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, ஒரு அமைச்சராக பதவி வகித்தவர், ஏன் இதுபோன்று பேச வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு, அமைச்சராக இருந்தவர், என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன எனவும், 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நல்ல விஷயங்களை அவர் சொல்லியிருக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். அதோடு, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
அரசு தரப்பு வாதம் என்ன.?
முன்னதாக, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், வாதத்தின்போது, பொன்முடியின் பேச்சு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நேரத்தில், தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்றும், அதற்குப்பின், பொன்முடிக்கு எதிரான 3 காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடந்ததாகவும் குறிப்பிட்டார்.
அந்த விசாரணையில், பொன்முடியின் பேச்சு, பெறுப்பு பேச்சு வரம்பில் வராது எனக்கூறி, அந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், அதன் பின்னர், தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றும், அதன் மீதான புலன் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைத் தான் பொன்முடி குறிப்பிட்டு பேசியதாகவும், அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.
வழக்கின் பின்னணி
பெண்கள் குறித்தும், சைவ, வைணவ சமயங்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அவரது பேச்சு வெறுப்பு வரம்புக்குள் வருவதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அவருக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படியே, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் தான், நீதிபதி வேல்முருகன், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.





















