TVK Vijay: நீங்க போறீங்களா.. இல்ல.. சினிமா பாணியில் மு.க.ஸ்டாலினை எச்சரித்த விஜய்!
பரந்தூர் பகுதி மக்களை தாங்கள் நேரில் சென்று சந்திக்காவிட்டால் நானே தலைமைச் செயலகத்திற்கு அவர்களை அழைத்து வருவேன் என்று விஜய் மு.க.ஸ்டாலினை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நடிகர் விஜய் உருவாக்கியுள்ள இந்த கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
மீண்டும் சூடுபிடிக்கும் பரந்தூர் விவகாரம்:
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழுவில் பேசிய விஜய் அனல் பறக்கும் வகையில் பேசினார். குறிப்பாக, பரந்தூர் விவகாரத்தை தனது அஸ்திரமாக அவர் பயன்படுத்த முடிவு செய்திருப்பது அவரது பேச்சிலே தெரியவந்துள்ளது.
பரந்தூர் விவகாரம் குறித்து பேசிய விஜய், "நான் இந்த பரந்தூர் போராட்டக்குழு மக்களை சமீபத்தில் சந்தித்தேன். அவர்கள் சொன்னதை கேட்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை சி.எம்.சார்.
சாதி, மதம் கடந்து தங்களோட குடியிருப்புகளை, வாழ்வாதாரத்தை, நீர்நிலைகளை காப்பாத்த ஒன்னா, நின்னு போராடிக்கிட்டு இருக்கிற பரந்தூர் மக்களை தயவு செய்து நீங்க நேர்ல சந்தித்து பேசுங்கள். உங்களின் அமைச்சர்களோ, உங்களின் அதிகாரிகளோ பேசக்கூடாது. நீங்களே நேரில் சந்தித்து பேசனும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்திரவாதத்தை நீங்கள் அவர்களுக்கு தர வேண்டும்.

மு.க.ஸ்டாலினை எச்சரித்த விஜய்:
இதை எல்லாம் நீங்கள் செய்யாவிட்டால், பரந்தூர் பகுதி விவசாயிகளையும், பொதுமக்களையும் நானே அழைத்துக் கொண்டு வந்து தலைமைச் செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும். அப்படி ஒரு சூழலை நீங்கள் உருவாக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அதையும் மீறி இப்படி ஒரு சூழல் வந்தால் நான் அதை சந்திக்க தயாராக உள்ளேன்."
இவ்வாறு விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியது முதலே பல இடங்களில் மென்மைப் போக்கை கையாண்டு வந்த விஜய், சமீபநாட்களாக தனது போக்கை சற்று மாற்றி வருகிறார். இனி வரும் நாட்களில் தீவிர விமர்சனங்களையும், ஆளுங்கட்சியின் தவறுகளையும் சுட்டிக்காட்டினால் மட்டுமே மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்பதன் அவசியத்தை அவர் உணர்ந்துள்ளார்.
விஜய் தீவிரம்:

பரந்தூர் விவகாரத்தில் நடிகர் விஜய் தொடக்கம் முதலே தீவிரம் காட்டி வருகிறார். ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிராக பரந்தூர் போராட்டத்தை மிகப்பெரிய அஸ்திரமாக கையில் எடுக்க நடிகர் விஜய் வியூகம் வகுத்து வருகிறார். பரந்தூர் மக்களை நேரில் சந்தித்தபோதே தனது அரசியல் சுற்றுப்பயணம் இங்கிருந்து தொடங்குகிறது என்று அறிவித்தார்.
தற்போது, பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதலமைச்சரை எச்சரிக்கும் விதமாக நடிகர் விஜய் பேசியிருப்பதும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக-விற்கு கடும் நெருக்கடி தருவது மட்டுமின்றி அவர்களுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் நடிகர் விஜய் வியூகம் வகுத்துள்ளார்.





















