TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
தவெக தலைவர் விஜய் அரசியல் சுற்றுப்பயணம், மாநாடு என்று அடுத்த 10 மாத காலம் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பணியாற்ற உள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் அனல்பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு வரும் திமுக, அதிமுக-விற்கு போட்டியாக களத்தில் குதித்திருப்பவர் நடிகர் விஜய்.
சூடுபிடிக்கும் விஜய்யின் அரசியல்:
சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக கடின உழைப்பால் முன்னேறிய நடிகர் விஜய், அரசியலிலும் சக்கரவர்த்தியாக வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக வரும் தேர்தலில் களமிறங்குகிறார். கட்சியை கடந்தாண்டு பிப்ரவரி மாதமே விஜய் தொடங்கினாலும், அதன்பின்பு சில மாதங்கள் அமைதி காத்தார். பின்னர், கடந்தாண்டு தவெக-வின் முதல் அரசியல் மாநாட்டிற்கு பிறகு அரசியலில் தீவிரம் காட்டினார்.
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அரசியலில் தீவிர கவனத்தை விஜய் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று நடந்த தவெக-வின் முதல் செயற்குழுவில் விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றியதுடன், திமுக மற்றும் பாஜக-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று உறுதியாக அறிவித்துள்ளார்.
பம்பரமாக சுழலப்போகும் விஜய்:
விஜய்யின் இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்றாக 3வது அணி உருவாகும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது. அடுத்த 10 மாதம் பம்பரமாக சுழன்று பணியாற்ற விஜய் திட்டமிட்டுள்ளார். தற்போது பூத் கமிட்டியை விஜய் வலுப்படுத்தி வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் மதுரையில் தனது மாநாட்டை நடத்த உள்ளார்.
அந்த மாநாட்டில் திமுக, பாஜக-விற்கு எதிராக அனல் பறக்கும் பல கருத்துக்களை விஜய் முன்னெடுத்து வைக்க உள்ளார். அதன்பின்பு, செப்டம்பர் முதல் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பால் அடுத்த 10 மாதம் தமிழ்நாட்டில் விஜய்யின் அரசியல் களம் அனல்பறக்கப்போகிறது.
கூட்டணிப் பேச்சும் தீவிரம்:
மதுரையில் நடக்க உள்ள அரசியல் மாநாட்டிற்கு இடையே உள்ள காலகட்டத்தில் விசிக உள்ள முக்கிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் விஜய் கவனம் செலுத்த உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தவெக-வினர் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், திமுக ஆட்சியில் நடந்த சட்டம் ஒழுங்கு அசம்பாவிதங்களை அதிகளவு மக்கள் மத்தியில் கொண்டு செல்ல விஜய் உத்தரவிட்டுள்ளார்.
பரந்தூர் போன்ற தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் உள்ள பகுதிகளுக்கும் விஜய் நேரில் சென்று மக்களைச் சந்திக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற அரசியல் தலைவர்களின் சுற்றுப்பயணங்களைப் போல அல்லாமல், தனது அரசியல் சுற்றுப்பயணம் கவனிக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.





















