போதுமான நிதி ஒதுக்கி நிச்சயமாக எல்லோரும் பாராட்டக்கூடிய அளவில் முதல்வர் அறிவித்தபடி உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவருக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பி.கே.மூக்கைத்தேவரின் பிறந்தநாள் விழா
பி.கே.மூக்கைத்தேவரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை, பி.கே. மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையிலான தி.மு.க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, “மக்கள் செல்வாக்கை பெற்று தொடர்ந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அவர் காலத்தில் கலைஞர் முதல்வராக இருந்த போது இப்பகுதி மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக உசிலம்பட்டி, கமுதி, மேலநீதிநல்லூரிலும் மூன்று கலைக் கல்லூரி அமைய காரணமாக இருந்தவர் பி.கே.மூக்கையாத்தேவர்.
விரைவில் மணிமண்டபத்தை கட்ட இருக்கிறோம்
அது போன்று மதுரையில் தேவர் சிலை நிறுவதற்கும் தலைவர்களோடு ஒன்றிணைந்து பாடுபட்டார். அந்த மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவின் போது முதல்வர் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் மணிமண்டபத்தை கட்ட இருக்கிறோம். அதற்கான இடத்தை ஆய்வு செய்து உசிலம்பட்டி மெயின் ரோட்டிலேயே அருகாமையிலேயே மணிமண்டபம் கட்டுவது பொருத்தமாக இருக்கும். அதற்கான இடத்தேர்வையும் உடனடியாக செய்ய உள்ளோம், முடிந்தால் கள்ளர் கல்வி கழகத்திற்கு சொந்தமான இடத்தை கேட்க இருக்கிறோம் அல்லது அரசு இடத்தையும் ஆய்வு செய்து வருகிறோம்.
பாராட்டக்கூடிய அளவில் மணிமண்டபம்
போதுமான நிதி ஒதுக்கி நிச்சயமாக எல்லோரும் பாராட்டக்கூடிய அளவில் மணிமண்டபம் அமைக்கப்படும். அரசியல் பேச விரும்பவில்லை. கோரிக்கையை உரிய நேரத்தில் நானும், பூமிநாதன் எம்.எல்.ஏவும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினோம், நான்கு நாட்களுக்கு பின் கூட திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயக்குமார் மூக்கையாத் தேவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போது ஏற்கனவே வணிக வரித்துறை அமைச்சரும், பூமிநாதன் எம்எல்ஏ-வும் கேட்ட கேள்விக்கு முதல்வர் அனுமதி கொடுத்திருக்கிறார் என தெரிந்து தான் கேள்வி எழுப்புகிறீர்கள் என்பது சட்டமன்றத்தில் பதிவாகியுள்ளது. எனவே நூற்றாண்டை முன்னிட்டு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என நாங்கள் கேட்டோம் கேட்ட உடனே கொடுத்தார் முதல்வர். இதற்கும் தேர்தல் வருவதற்கும், அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மூக்கையாத்தேவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட மிக பெரிய தலைவர் இதில் அரசியல் பேச வேண்டிய அவசியமில்லை” எனப்பேசினார்.