Joe Root: சச்சினுக்கு அப்புறம் ரூட்தான்.. உலகத்துலே அதிக டெஸ்ட் ரன்கள்! இந்தியாவை வதைத்து புது வரலாறு!
ஓல்ட் ட்ராஃபோர்ட் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ஜோ ரூட் உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற வரலாறு படைத்தார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்களில் அவுட்டான நிலையில், அடுத்து இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.
ஜோ ரூட் அபார சதம்:
ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும், டக்கெட் 94 ரன்களிலும் அவுட்டாகி சதத்தை தவறவிட்டாலும் களமிறங்கியது முதல் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜோ ரூட் சதம் விளாசி அசத்தினார். இந்த போட்டி தொடங்கும் முன் டிராவிட், காலீஸ் மற்றும் பாண்டிங் ஆகியோரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவர் முன் இருந்தது. அதாவது, 120 ரன்கள் எடுத்தால் உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார் என்பதே அந்த சாதனை.
பும்ரா, கம்போஜ், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என அணியின் மொத்த பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் ஜோ ரூட்டை அவுட்டாக்க முடியவில்லை. வேகம், சுழல் என மாறி, மாறி இந்தியா நடத்திய பந்துவீச்சு தாக்குதலை மிக எளிதாக அவர் முறியடித்தார். மைதானமும் பேட்டிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பு தந்ததால் அவர் அரைசதம் கடந்து சதம் விளாசினார்.
சச்சினுக்கு அடுத்து ரூட்தான்:
சதம் விளாசிய அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசிய 38வது சதம் இதுவாகும். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 120 ரன்களை எட்டியபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி புதிய வரலாறு படைத்தார். 168 டெஸ்ட் போட்டிகளில் 287 இன்னிங்சில் ஆடி ரிக்கி பாண்டிங் எடுத்த 13 ஆயிரத்து 378 ரன்களை இவர், 157 டெஸ்ட் போட்டிகளில் 286 இன்னிங்சில் ஆடி முறியடித்துள்ளார்.
சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களில் தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்கள் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் மட்டுமே ஆகும். 34 வயதே ஆன ஜோ ரூட் முன்பு தற்போது சச்சின் டெண்டுல்கரின் சாதனைதான் உள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் 51 சதத்துடன் சச்சினும், 45 சதத்துடன் காலீசும், 41 சதத்துடன் ரிக்கி பாண்டிங்கும் உள்ளனர்.
சச்சின் சாதனை தப்புமா?
இன்னும் குறைந்தது 3 ஆண்டுகள் வரை ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் ஆடினால் சச்சினின் சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மான்செஸ்டர் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் தன்வசமே வைத்துள்ளார்.
கொரோனா காலத்திற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் முழு கவனம் செலுத்தி வரும் ஜோ ரூட் ஒவ்வொரு தொடரிலும் குறைந்தது ஒரு சதத்தை விளாசி வருகிறார். ஜோ ரூட் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி தொடர்ந்து சிறப்பாக ஆடி வருவதால் இங்கிலாந்து அணி 450 ரன்களை கடந்து ஆடி வருகிறது.
இந்தியாவுக்கு சவால்:
இந்த போட்டியில் இந்திய அணிக்கு அடுத்த 2 நாட்கள் மிகவும் சவாலானதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. புதிய சாதனை படைத்த ஜோ ரூட்டிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




















