Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த நயினார் நாகேந்திரன்
உங்களுக்கு சோறு கூட போடுறோம்...ஆனா ஓட்டுப் போட மாட்டோம்னு மக்கள் சொல்றாங்கய்யா என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னணியிலேயே அக்கட்சி தொண்டர் ஒருவர் சொன்னது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் இப்போதே தொடங்கிவிட்டன. அந்தவகையில் ஆளும் திமுக ஓரணியில் தமிழ் நாடு என்ற பிரச்சாரத்தையை தொடங்கியுள்ளது. அதேபோல், அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தவெக ஆகஸ்ட் மாதம் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.
அதன்படி அதிமுக உடன் கூட்டணியில் உள்ள பாஜகவும் கட்சி வேலைகளை தீவிரபடுத்தியுள்ளது. அந்தவகையில், விருதுநகரில் ரோசல்பட்டியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பாஜக தொண்டர் ஒருவர்,”நீங்கள் தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு சாப்பாடு கூட போடுறோம். ஆனால், ஓட்டுப் போட மாட்டோம்னு மக்கள் சொல்றாங்கய்யா”என்று கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
அண்மையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டம் ஒன்றில் பேசிய நயினார் என்னை பாஜக தொண்டர்களுக்கே யார் என்று தெரியவில்லை. ”வடசேரி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு கொண்டால் என்னை தெரியவில்லை எனவே கூறுகிறார். கடலூரை சேர்ந்த பெண் நிர்வாகியை தொடர்பு கொண்ட நான் நயினார் நாகேந்திரன் என கூறிய போது அவர் என்னை அவர்களுடைய நைனா என நினைத்து விட்டார் போல என்னை ஒழுங்கா இருந்துக்கோ என கூறி போனை வைத்து விட்டார் என வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். இச்சூழலில் தான் தொண்டர் ஒருவர் இப்படி கூறியிருக்கிறார். பல்வேறு தரப்பினரும் தமிழ் நாட்டு மக்களின் மன நிலையைத்தான் வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறிவருகின்றனர்.






















