Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
Saroja devi passed away: தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருடன் அதிக படம் கதாநாயகியாக நடித்த நாயகி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 87 வயதான இவர் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.
பெரும் சோகம்:
அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. தமிழ் மட்டுமின்றி அவர் கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் அவர் நடித்துள்ளார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் இவரை கன்னடத்து பைங்கிளி என்று அன்புடன் அழைப்பார்கள்.
பெங்களூரில் 1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை காவல்துறை அதிகாரி. குடும்பத்தில் நான்காவது மகளாக பிறந்த இவர் சிறுவயது முதலே நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
வெற்றி மேல் வெற்றி:
1955ம் ஆண்டு இவர் முதன்முதலில் கன்னட திரைப்படமான மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய இவர் பிரபலமானார். பின்னர், 1957ம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதன்பின்பு, இவர் மானமுள்ள மருதம் என்ற படத்தில் நடித்தார். இவரது திறமையை கண்ட எம்ஜிஆர் இவரை தனது மிகப்பெரிய பொருட்செலவில் உருவான நாடோடி மன்னன் படத்தில் கதாநாகியாக ஒப்பந்தம் செய்தார்.

அதன்பின்பு, சரோஜாதேவியை தமிழ் திரையுலகில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி என அப்போது தமிழ் சினிமாவை கட்டியாண்ட கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். நாடோடி மன்னன், சபாஷ் மீனா, கைராசி, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, பார்த்தால் பசிதீரும், ஆலயமணி, தாயை காத்த தனயன், பெரிய இடத்து பெண், அன்பே வா, புதிய பறவை என இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி மேல் வெற்றி பெற்றது. 120க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக மட்டுமே நடித்துள்ளார்.
ஆதவன்தான் கடைசி:
பின்னர், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். 180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரோஜாதேவி தமிழில் கடைசியாக சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே பெங்களூரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
விருதுகள்:

இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்மபூஷண் விருது, பத்மஸ்ரீ விருது வாங்கி அசத்தியுள்ளார். கலைமாமணி விருது, என்டிஆர் தேசிய விருது, ராஜ்யோத்சவா விருது என தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக அரசின் விருதுகளையும் அவர் வென்றுள்ளார். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.





















