Ben Stokes: 9 வருடத்திற்கு பிறகு சதம்.. இந்தியாவிற்கு எதிராக ஸ்டோக்ஸ் செஞ்சுரி.. வச்சு செய்யும் இங்கிலாந்து கேப்டன்!
Ben Stokes Century: இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆண்டுகளுக்கு பிறகு சதம் விளாசியுள்ளார்.

Ben Stokes Century: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இங்கிலாந்து 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்டில் நடந்து வருகிறது.
ஸ்டோக்ஸ் சதம்:
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணிக்காக ஜாக் கிராவ்லி 84 ரன்களும், டக்கெட் 94 ரன்களும் எடுக்க, ஒல்லி போப் 71 ரன்களும் எடுக்க ஜோ ரூட் 150 ரன்கள் விளாசினார். வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்துக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று 66 ரன்களில் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி மீண்டும் களத்திற்கு வந்து இந்திய பந்துவீச்சை சோதித்தார்.

பும்ரா, கம்போஜ், சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என பலரும் வீசியும் ஸ்டோக்சை கட்டுப்படுத்த முடியவில்லை. அபாரமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பென் ஸ்டோக்ஸ் விளாசும் சதம் இதுவாகும். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 13வது சதம் இதுவாகும்.
9 ஆண்டுகளுக்கு பிறகு:
பென் ஸ்டோக்ஸ் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு ஜுன் 28ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2வது இன்னிங்சில் 155 ரன்கள் விளாசியிருந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக அவர் அடிக்கும் 2வது சதம் ஆகும். கடைசியாக இந்தியாவிற்கு எதிராக 2016ம் ஆண்டு சதம் விளாசியிருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக சதம் விளாசியுள்ளார்.
அவர் விளாசியுள்ள 14 சதங்களில் 4 சதங்கள் மட்டுமே வெளிநாட்டு மண்ணில் விளாசப்பட்டது. அதில் ஒன்று இந்தியாவில் அடிக்கப்பட்டது. மற்ற 3 சதங்கள் தென்னாப்பிரிக்க மண்ணில் அவர் அடித்தது ஆகும். இந்திய அணி்க்கு எதிராக அவர் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
7 ஆயிரம் ரன்கள்:

டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அணிக்குள் திரும்பி திறமையாக ஆடி வருகிறார். அவர் இதுவரை 115 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். அதில் 35 அரைசதங்களும், 14 சதங்களும் அடங்கும். 1 இரட்டை சதமும் அடங்கும். 258 ரன்கள் அதிகபட்சமாக எடுத்துள்ளார். மேலும், ஒரு பந்துவீச்சாளராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 229 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 9 ஆண்டுகளுக்கு சதம் விளாசியது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சதம் விளாசியது ஆகிய சாதனைகள் மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்தும் வரலாறு படைத்துள்ளார். இங்கிலாந்து அணி 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓல்ட் ட்ராஃபோர்டில் நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 600 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்திய அணியை இன்னிங்ஸ் தோல்வி அடையச் செய்யும் மனநிலையில் அவர்கள் ஆடி வருகின்றனர்.




















