TVK Fails?: கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
தவெக சார்பில் நேற்று நடத்தப்பட்ட போராட்டத்திற்கு எதிர்பார்த்த அளவில் கூட்டம் இல்லாமல் போன நிலையில், விஜய்யும் சிறிது நேரமே பேசியது பெரும் பேசுபொருளாளியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மடப்புரம் அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னையில், சிவானந்தா சாலையில் நேற்று தவெக சார்பில், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு எதிர்பார்த்த அளவில் கூட்டம் வராத நிலையில், விஜய்யும் மிகச் சிறிய அளவிலேயே பேச்சை முடித்துக்கொண்டார். இதனால், தவெகவின் மவுசு இவ்வளவு தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய்க்கு கூடாத கூட்டம்.?!
காவல்துறை மற்றும் அரசை கண்டித்து தவெக நேற்று நடத்திய போராட்டம், ஏற்கனவே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, இந்த போராட்டம் அரசியலில் விஜய்க்கு திருப்புமுனையாக அமையுமா என்ற அளவில் பேச்சுக்கள் இருந்தன.
இந்த போராட்டத்தில், சென்னையில் உள்ள தவெகவினர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதனால், வெளியூர்களிலிருந்து வந்த தவெகவினரை காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர்.
இது ஒருபுறமிருந்தாலும், உள்ளூர் தவெகவினரே பெரிய அளவில் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. விஜய் வந்தால் கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி சொல்லும் அளவிற்கு கூட்டம் வரவில்லை. இதற்கு, காவல்துறையின் கெடுபிடிதான் காரணம் என்று தவெக தரப்பில் கூறப்பட்டாலும், அவர்கள் தடுத்து நிறுத்தியதென்னவோ வெளியூர் தொண்டர்களை மட்டும்தான்.
15-லிருந்து 20 ஆயிரம் பேர் வருவார்கள், சிவானந்தா சாலையே கலகலக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையில் கூட கூட்டம் கூடாததால், தவெகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதையும் மீறி கூட்டத்திற்கு வந்த பலர், தண்ணீர் கிடைக்காமல் மயங்கிய சம்பவங்கள் அரங்கேறியது, தவெகவின் ஏற்பாடுகளின் மேல் கேள்வியை எழுப்பியது.
லாக்அப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வைத்து ஸ்கோர் செய்யாத விஜய்
இந்த போராட்டத்தில் தவெக ஸ்கோர் செய்யாமல் விட்ட இன்னொரு விஷயம், லாக்அப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மேடையேற்றினாலும், அவர்களை சரியா பயன்படுத்தவில்லை என்பதுதான். ஆம், நேற்றைய கூட்டத்தில் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மேடையேற்றப்பட்டதோடு, மொத்தமாக பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.
விஜய் முன்னிலையில் மேடையேற்றப்பட்ட அவர்களை நன்றாக பேசவிட்டு, அவர்களது கண்ணீரை மக்கள் கண்டிருந்தால், பெரிய தாக்கம் இருந்திருக்கும். ஆனால் தவெக அதையும் செய்யவில்லை. அவர்களை சரியாக பேசவிடாமல் வாய்ப்பை தவறவிட்டுவிட்டனர்.
அளவாக பேசி ஏமாற்றம் அளித்த விஜய்
இந்த போராட்டம் எந்த அளவிற்கு எதிர்பார்க்கப்பட்தோ, விஜய்யின் பேச்சும் அந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரது திட்டங்கள் பற்றி கூறுவார், அறிவிப்புகளை வெளியிடுவார், அவரது பாணியில் வெறித்தனமாக பேசுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் இரண்டரை நிமிடங்கள் மட்டுமே பேசி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மட்டும் விமர்சித்து, சாரி கேட்பது குறித்து ஒரு கேள்வியை முன்வைத்துவிட்டு பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். பேரணியும் நடத்தவில்லை.
இவையெல்லாம் தவெகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. விஜய்யின் முகத்திற்கே கூட்டம் கூடாதது, அவரது மவுசு அவ்வளவுதானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒரு ஞாயிற்றுக்கிழமையில், 5 ஆயிரம் பேரை கூட கூட்ட முடியாத அளவிற்கு தான தவெகவின் நிலை உள்ளதாக என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.





















